சென்னையில் கேஸ் சிலிண்டர் நிறுவன ஊழியராக நடித்து மோசடி: வீடு தேடி வந்து பணம் வசூலித்து ஏமாற்றிய இளம்பெண்

சென்னை: எரிவாயு இணைப்பு சரிபார்க்க வந்ததாக கூறி அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரிடம் ரூ.7,300 மோசடி செய்த இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை ராமன் சாலையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன்(78). அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வீட்டிற்கு கடந்த வாரம் இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். நான் கேஸ் நிறுவனத்தில் இருந்து வருவதாகவும், உங்கள் கேஸ் சிலிண்டரை சரிபார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதை நம்பிய போராசிரியர் இளம்பெண்ணை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார்.

சிலிண்டரை பரிசோத்த பிறகு சில பிரச்னைகள் இருக்கிறது. அதை சரிசெய்தால்தான் அடுத்து சிலிண்டர் உங்களுக்கு அனுப்ப முடியும் என்று கூறியுள்ளார். அதை சரிசெய்ய வேண்டும் என்றால் ரூ.7,300 தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதை நம்பிய பேராசிரியர் கேட்ட பணத்தைக் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய பெண் அலுவலகம் சென்று ஆட்களை அனுப்புவதாக கூறிவிட்டு ெசன்றுள்ளார். ஆனால், இளம்பெண் கூறியபடி யாரும் சிலிண்டரை சரிசெய்ய வரவில்லை. சம்பவம் குறித்து கேஸ் ஏஜென்சியிடம் போன் செய்து கேட்டபோது, நாங்கள் யாரும் ஆட்களை அனுப்பவில்லை என்று கூறியுள்ளனர்.

தான் ஏமாற்றப்பட்டது குறித்து போராசிரியர் முத்துகிருஷ்ணன் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி செய்த இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

Related Stories:

>