×

ஐஎஸ்எல் கால்பந்து: சென்னை-மோகன்பெகான் இன்று மோதல்

கோவா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் ஜிஎம்சி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் வலுவான மோகன்பெகான் அணியை எதிர்த்து, சென்னையின் எப்சி அணி களமிறங்குகிறது. நடப்பு ஐஎஸ்எல் தொடரில் இதுவரை 7 போட்டிகள் விளையாடி உள்ள ஏடிகே மோகன்பெகான் அணி, அவற்றில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று, 16 புள்ளிகளுடன் கோல்களின் அடிப்படையில் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உள்ள மும்பை அணியும் 7 போட்டிகளில்  5 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி இதுவரை 7 போட்டிகளில் ஆடி, அவற்றில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

9 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது 7ம் இடத்தில் உள்ளது. இன்று மோகன்பெகானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால், சென்னை அணி 5ம் இடத்திற்கு முன்னேறும். சென்னையின் அணி ஃபார்வர்டு வீரர் ஜாகுப் சில்வஸ்டர் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால் அவருக்கு தோள் கொடுக்க சரியான இணை இல்லை என்பது குறை. கோவாவுக்கு எதிரான போட்டியில் மட்டும் ரஃபேல் கிரிவெல்லாரோ மற்றும் ரஹீம் அலி ஆகியோர் அற்புதமாக ஆடி, அணிக்கு வெற்றி தேடித்தந்தனர். இன்றைய போட்டியிலும் இந்த ஜோடி, இணைந்து திறமையை வெளிப்படுத்தினால், வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது. மோகன்பெகான் அணியில் ராய் கிருஷ்ணா தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்.

மன்வீர் சிங்கும் அவருக்கு கை கொடுக்கிறார். இந்த ஜோடியை எதிர்கொள்வது சென்னையின் வீரர்களுக்கு சவாலாகத்தான் இருக்கும். இவர்களுக்கு பிராக்கெட் போட்டால் மட்டுமே வெற்றி குறித்து சிந்திக்க முடியும் என்ற நிலையில் சென்னையின் வீரர்கள், அதற்கேற்ற வியூகங்களுன் இன்று களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

போராடி வென்றது ஜாம்ஷெட்பூர்
நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக கடுமையாக போராடிய ஜாம்ஷெட்பூர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. போட்டி துவங்கியதும் பெங்களூரு அணியின் முன்கள வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் முதல் 11 நிமிடங்களில் கோல் அடிக்க எளிதாக கிடைத்த 4 வாய்ப்புகளை அவர்கள் வீணடித்தனர்.

தொடர்ந்து முதல் பாதி முழுவதும் பந்தை தங்கள் வசமே வைத்திருந்த, பெங்களூரு வீரர்களால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 2ம் பாதியில் 79வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணியின் ஃபார்வர்ட் ஸ்டீவன் ஏஸ், அருமையான ஹெட்டர் மூலம் ஒரு கோல் அடித்து, அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு ஜாம்ஷெட்பூர் முன்னேறியுள்ளது.

Tags : ISL ,clash ,Chennai-Mohenjo-daro , Congress, Shiv Sena, National Politics
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து நாக்-அவுட் ஒடிஷா-கேரளா இன்று பலப்பரீட்சை