×

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு...! தினசரி 5,000 பக்தர்கள் அனுமதி

பம்பை: மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல், ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.  2020-2021-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் தினசரி வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

41 நாட்கள் சிறப்பு வழிபாடுகளுக்கு பிறகு கடந்த 26-ந் தேதி மண்டல பூஜை நடந்தது. அதன் பிறகு நடை அடைக்கப்பட்டது. இந்த 41 நாட்களும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை மீண்டும் திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு பக்தர்ளுக்கு அனுமதி கிடையாது. மறுநாள் 31-ந் தேதி முதல் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

அதை தொடர்ந்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ந் தேதி நடைபெறும். அதை தொடர்ந்து 19-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 20-ந் தேதி காலை 6 மணிக்கு பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்பு கோவில் நடை அடைக்கப்பட்டு 2020-2021-ம் ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜை-வழிபாடுகள் நிறைவு பெறும். டிசம்பர் 31-ந் தேதி திங்கள் முதல் ஞாயிறு வரை தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19-ந் தேதி வரையிலான தரிசனத்திற்கு நேற்று மாலை 6 மணி முதல் ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது.

Tags : Sabarimala Iyappan ,Capricorn Lantern Puja ,devotees , Sabarimala Iyappan temple walk tomorrow for Capricorn Lantern Puja ...! 5,000 devotees allowed daily
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...