ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன்: சீமான்

சென்னை: ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாக ரஜினியின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு செய்திகள், தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களுடன் ரஜினி ஆலோசனையில் ஈடுபட்டார். அன்றைய தினத்தில் கூட, ரஜினி தனது உடல்நிலை குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அரசியல் நிலைப்பாடு குறித்து விரைவில் ரஜினி தரப்பில் அறிக்கை வெளியாகும் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி ரஜினி வெளியிட்ட அறிக்கையில், ‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31ம் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம். #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல\” என்று தெரிவித்தார். அத்துடன் கடிதமொன்றையும் வெளியிட்டார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து, இன்று ரஜினிகாந்த் 3 பக்க அறிக்கையை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், தான் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை என்றும், ரஜினி மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும் என்றும், மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

இவரது திடீர் அறிவிப்பு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; இந்தியத் திரையுலகின் சிறந்த திரைக்கலைஞர் ஐயா ரஜினிகாந்த் அவர்கள், தனது உடல்நலனைக் கருத்திற்கொண்டு எடுத்துள்ள முடிவை முழுமையாக வரவேற்கிறேன். அவர் முழு உடல்நலம் பெற்று, கலையுலகப் பயணத்தைத் தொடர எனது வாழ்த்துகளையும், பேரன்பையும் தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>