×

அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தினால் கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

அரியலூர்: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அரியலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த விரும்பும் குழுவினர், ஜல்லிக்கட்டு நடத்தப்பட உள்ள தேதிக்கு 20 நாட்கள் முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், ஜல்லிக்கட்டு தொடர்பாக கிராம கணக்கு புத்தகத்தில் பதியப்பட்டுள்ள விவரம் ஆகியவற்றை குறிப்பிட்டு கீழ்கண்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் கோவிட்-19 பெருந்தொற்று குறித்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளிலும் 300 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும், எருது விடும் நிகழ்ச்சியில் 150 மாடுபிடி வீரர்களுக்கு மிகாமலும் மற்றும் பார்வையாளர்கள் 50 சதவீதத்திற்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் மாடுபிடி வீரர்களாக பங்கேற்பவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை கூடத்தில் கோவிட்-19 தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும் நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் உடல் வெப்பப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், முகக்கவசம் அணிவதும் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் - ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி கேட்கும் இடத்தில் ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக அனுமதி பெற்றதற்கான ஆவணங்கள், பத்திரிகைச் செய்தி, ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியின் போது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு ஜல்லிக்கட்டு நடத்தும் குழுவினரே பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி காப்பீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்கள் ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்து அரசாணை பெறப்பட்ட பின்னரே ஜல்லிக்கட்டு நடத்த சம்பந்தப்பட்ட குழுவினருக்கு அனுமதி வழங்கப்படும். அதன் பின்னரே ஜல்லிக்கட்டு தொடர்பான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட குழுவினர் மேற்கொள்ள வேண்டும். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்குபெறும் காளை உரிமையாளர், ஒரு உதவியாளர் மற்றும் காளை விவரங்களை நிகழ்ச்சிக்கு 7 நாட்களுக்கு முன்பே மாவட்ட நிர்வாகத்திடம் பதிவு செய்து, மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாத நபர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை, அரசாணை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி எதுவும் பெறாமல் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் மூலம் சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : Jallikattu ,Collector ,Ariyalur district , Jallikattu
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...