×

அரசியல் கட்சி தொடங்கவில்லை, அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன்: ரஜினிகாந்த்

* 4 பேர் 4 விதமாக பேசுவார்கள் என்பதற்காக நான் ஏமாற்ற முடியாது
* என் உடல்நிலை பாதிப்பை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கை
* நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை


சென்னை: அரசியல் கட்சி தொடங்கவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அவரது ட்விட்டரில் அறிக்கை பதிவிட்டுள்ளார். அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்வேன் என கூறியுள்ளார். நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும், என்னை மன்னியுங்கள் என கூறினார். பிரச்சாரத்தின் போது என் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி வந்தவர்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


என்னை நம்பி என்னுடன் வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை என நடிகர் ரஜினி கூறினார். 4 பேர் 4 விதமாக பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி வருபவர்களை நான் ஏமாற்ற முடியாது என தெரிவித்திருந்தார். என் உடல்நிலை பாதிப்பை ஆண்டவன் எனக்கு கொடுத்த எச்சரிக்கையாகத்தான் பார்க்கிறேன் என கூறினார். தடுப்பூசி வந்தால் கூட நோய் எதிர்பு சக்தியை குறைக்கும் மருந்துகளை சாப்பிடும் எனக்கு உடல்நிலை பாதிக்கும்.

அண்ணாத்த படப்பிடிப்பு ரத்துக்கு நான் தான் காரணம்:

மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றேன். கிட்டத்தட்ட 120 பேர் கொண்ட படக்குழுவினருக்கு தினமும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிந்து மிகவும் ஜாக்கிரதையாக படப்பிடிப்பை நடத்தினோம். அதையும் மீறி 4 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனே இயக்குனர் படப்பிடிப்பை நிறுத்தி எனக்கு உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வித்தார்.

எனக்கு இரத்தக் கொதிப்பில் தொடர்ந்து அதிக ஏற்றத் தாழ்வு ஏற்பட்டது. மேலும் என் உடல்நிலையை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர் திரு.கலாநிதி மாறன் மீதமுள்ள படப்பிடிப்பை ஒத்திவைத்தார். இதனால் பல பேருக்கு வேலைவாய்பு இழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம். இவை அனைத்துக்கும் நான் தான் காரணம், என்னுடைய உடல்நிலை தான் காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய தமிழருவி மணியன் பேட்டி:

திட்டமிட்டபடி வரும் 31-ம் தேதி கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என நேற்று ரஜினியை சந்தித்த பிறகு  தமிழருவி மணியன் பேட்டியளித்திருந்தார். வரும் 31-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் கட்சியின் பெயர், சின்னம், கொடி குறித்த அறிவிப்பை டிவிட்டர் வாயிலாக வெளியிடுவார் என கூறியிருந்தார். அடுத்த மாதம் முதல் தீவிர அரசியலில் ஈடுபடுவார் எனவும் கூறியிருந்தார்.

அர்ஜூன மூர்த்திக்கு நன்றி!:

நான் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியில் பொறுப்பான பதவியிலிருந்து விலகி என் கூட வந்து பணியாற்ற சம்மதித்த மரியாதைக்குரிய அர்ஜூன மூர்த்திக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன் என கூறினார். தேர்தல் அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்யமுடியுமோ அதை நான் செய்வேன் என கூறினார்.

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை:

உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டார்.



Tags : party ,Rajinikanth , Political party, not started, people, will, Rajinikanth
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...