×

தண்ணீரை தேக்காமல் திறந்துவிடப்பட்டதால் காவேரிப்பாக்கம் ஏரியில் 28 அடியாக சரிந்த நீர்மட்டம்

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுவதால் 28 அடியாக நீர் மட்டம் சரிந்தது. இதனால், அறுவடை செய்த விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு நிகரான நெல் உற்பத்திக்கு மூலகாரணி பாலாறு. இந்த பாலாற்றில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள அணைக்கட்டு பகுதியில் தடுப்பனை கட்டப்பட்டு, அதன் வாயிலாக 4825.2 கனஅடி அளவு நீர் சேகரிக்கப்படுகிறது. இப்பகுதியில் இருந்து தான் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலம் ஏரிக்கு நீர் கொண்டு வரப்படுகிறது.
 
மேலும் காவேரிப்பாக்கம் ஏரி அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரி நிரம்பி வழியும் காலங்களில், நரிமதகு, சிங்கமதகு, மூலமதகு, பள்ளமதகு உள்ளிட்ட 10 மதகுகள் மூலம், விவசாயத்திற்கு கால்வாய் மூலம் நேரடியாக நீர் பெறப்பட்டு சுமார் 6278 ஏக்கர் நில பரப்பில் விவசாயம் செய்யப்படுகின்றன. இந்த ஏரியானது ஒரு முறை நிரம்பி வழிந்தால் மூன்று போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மை.
இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அண்மையில் நிவர், புரெவி புயல் காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால், பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தொடர்ந்து, பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, ஏரியின் முழு கொள்ளளவான 30.6 அடியில் 29 அடிக்கு தண்ணீர் நிரம்பியது.

இந்நிலையில், ஏரி முழு கொள்ளளவு எட்டுவதற்கு முன் கடந்த 6ம் தேதி கடைவாசல் பகுதியில் உள்ள 57 மதகுகள் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதேபோல் மகேந்திரவாடி ஏரிக்கு செல்லும் கால்வாய் பகுதியில் உள்ள 9 மதகுகளும் திறந்து விடப்பட்டு, இரவு பகலாக நீர் வெளியேற்றப்பட்டது.

பின்னர் கடைவாசல் பகுதியில் உள்ள 57 மதகுகள் மட்டும் சில தினங்களுக்கு முன்பு மூடப்பட்டது. ஆனால் மகேந்திரவாடி ஏரிக்கு செல்லும் 9 மதகுகள் மூடப்படாமல் நீர் கடந்த 22 நாட்களாக தொடர்ந்து, வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், தற்போது பாலாற்றில் இருந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு வரும் கால்வாயில் நீர் குறைந்த அளவிலே வந்து கொண்டு இருக்கின்றன. இதனால் ஏரியில் 29 அடிக்கு இருந்த நீர் 28 அடியாக குறைந்தது. இதனால் ஏரி நீர் நம்பி நடவு செய்த விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மூன்று போகம் வரக்கூடிய தண்ணீர், ஒரு போகமாவது வருமா? என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: காவேரிப்பாக்கம் ஏரியின் கடைவாசல் பகுதியில் உள்ள 57 மதகுகளின் பலகை பகுதியில் மூன்றரை அடி அளவுக்கு நீர் நிரம்பி வழியும் காலங்களில் மட்டுமே கடைவாசல் திறக்கப்பட்டு இருந்தன. இதனால். மூன்று போகத்திற்கு நீர் பஞ்சம் இல்லாமல், விவசாயம் செய்து வந்தனர். ஆனால் தற்போது அரசு அதிகாரிகள் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டாமல் நீரை வெளியே திறந்து விட்டனர். இதனால் மூன்று போகம் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில், ஒரு போகத்திற்காவது நீர் வருமா? என்ற கவலையில் உள்ளோம். எனவே அரசு அதிகாரிகள் விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு, ஏரியில் நீர் தேக்கி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றனர்.

Tags : Kaveripakkam Lake , Kaveripakkam Lake
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள...