உஷார் மக்களே!: வங்கி போல் குறுஞ்செய்தி அனுப்பி மர்மநபர்கள் நூதன மோசடி..வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க போலீஸ் அறிவுறுத்தல்..!!

சென்னை: வங்கி கணக்கில் திடீரென தவறி பண பரிமாற்றம் நடந்துள்ளதாக குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் பணத்தை பறிக்கும் கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக சென்னை போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்தியில், திடீரென வங்கி கணக்கில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது போன்று குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். குறுஞ்செய்தி வந்தவுடன் மர்மநபர் ஒருவர் தவறுதலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்ததாக கூறி குறுஞ்செய்தி மூலமாகவோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ உரையாடல் நடத்தி மோசடி செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, வங்கி அனுப்பும் குறுஞ்செய்தி போன்றே போலியான குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் ஏமாற்றுவதை சைபர் கொள்ளையர்கள் துவங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். வங்கி கணக்கிற்கு சென்று பணம் உண்மையாக வந்துள்ளதா என்று ஆய்வு செய்ய விடாமல் திசைதிருப்பி google pay அல்லது paytm மூலம் அந்த பணத்தை கொள்ளையடிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற புகார்கள் சைபர் காவல் நிலையங்களில் குவிந்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அடையாறு துணை ஆணையர் விக்ரமன் சமூக வலைத்தளத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories: