×

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்: பழிதீர்த்தது இந்திய அணி...! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. லபுஷேன் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 115.1 ஓவர்களில் 326 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. இது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 131 ரன் கூடுதலாகும். கேப்டன் ரஹானே அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் 112 ரன்னும், ஜடேஜா 57 ரன்னும் எடுத்தனர்.

ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹாசல்வுட் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். 131 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை ஆடியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் ஆட்டமிழந்தனர். இளம் வீரரான கிரீன் மற்றும் கம்மின்ஸ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். கடைசி வரை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணி போராடியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மின்ஸ் அவுட்டானார்.

கிரீன் 45 ரன்னில் வெளியேறினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 200 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 3 விக்கெட், அஷ்வின், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட், உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் இந்திய அணிக்கு 70 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

Tags : Boxing Day Test ,team ,Australia ,Indian ,win , Boxing Day Test against Australia: Indian team avenges ...! Great win by 8 wickets
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...