×

கொரோனா வார்டுகளில் ஐசியூ படுக்கைகள் 60% குறைக்கப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

புதுடெல்லி: தனியார் மருத்துவமனை கொரோனா வார்டுகளில் ஐசியு படுக்கை வசதி 60 சதவீதமாக குறைக்கப்படுவது உறுதி என உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு தெரிவித்தது. அக்டோபரில் கொரோனா 3ம் கட்ட அலை தீவிரம் ஆனதை அடுத்து 33 தனியார் மருத்துவமனையில் கொரோனா ஐசியு வார்டுகளில் படுக்கை வசதியை 80 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் எனும் அரசின் கோரிக்கைக்கு உயர் நீதிமன்றம் சம்மதம் வழங்கியது. அதையடுத்து ஐசியு படுக்கை வசதி 80 சதவீதமாக அதிகரிப்பு செய்யப்பட்டது. இதனிடையே, சுகாதார பராமரிப்பு சேவை அளிப்போர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மனுவில், ‘‘கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், படுக்கைகளை கொரோனா அல்லாத மற்ற நோயாளிகளுக்கு ஒதுக்க உத்தரவிட வேண்டும்’’, என கோரப்பட்டு இருந்தது.

வழக்கு தொடர்பான விசாரணையில் நீதிபதி நவீன் சாவ்லா முன்னிலையில் கடந்த 25ல் ஆஜராகி அரசு தரப்பு வக்கீல்கள் கூறுகையில், ‘‘படுக்கைகளை 80 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாகவும், அதைத் தொடர்ந்து படிப்படியாக மேலும் குறைக்கவும் கொரோனா நிலைமை மற்றும் மருத்துவமனைகளில் படுக்கை இருப்பை கண்காணிக்கவும் ஆம் ஆத்மி அரசால் நியமிக்கப்பட்ட எய்ம்ஸ் இயக்குநர் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினரைக் கொண்ட வல்லுநர் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது. கமிட்டி பரிந்துரையை விரைவில் அமல்படுத்த உள்ளோம்’’, எனக் கூறினர். வழக்கின் விசாரணை மீண்டும் நேற்று நடைபெற்றது. அப்போது அரசு தரப்பு வக்கீல்கள் நீதிபதி சுப்ரமண்யம் பிரசாத்திடம் கூறுகையில், ‘‘ஐசியு படுக்கைகளை 60 சதவீதமாக குறைக்கும் பரிசீலனை உடனடியாக அமலாக்கபடும்’’, எனக் கூறினர். அதைத் தொடர்ந்து நீதிபதி கூறுகையில், ‘‘விசாரணை வரும் 8ம் தேதி நடைபெறும்’’, என்றார்.

Tags : ICU , ICU beds in corona wards to be reduced by 60%: Government information in iCourt
× RELATED வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி...