×

நொய்டா பிலிம் சிட்டி விரிவான அறிக்கை மார்ச்சில் கிடைக்கும்

நொய்டா: பிலிம் சிட்டி அமைக்கும் திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, மற்றும் உத்தேச நிதி குறித்த சிபிஆர்இ தெற்காசிய நிறுவனத்தின் அறிக்கை மார்ச் 2021ம் ஆண்டு கிடைக்கும் என யமுனை எக்ஸ்பிரஸ்வே தொழிலக மேம்பாட்டு ஆணையம் (ஒய்இஐடிஏ) தெரிவித்து உள்ளது.கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் ஜேவர் சர்வதேச ஏர்போர்ட் அருகே சர்வதேச தரத்தில் பிலிம் சிட்டி அமைக்கப்படும் என ஏர்போர்ட் பூமி பூஜையின் போது உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து பிலிம் சிட்டிக்கான விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி ஒய்இஐடிஏ அதிகாரிகளுக்கு யோகி கடந்த செப்டம்பரில் உத்தரவிட்டார்.ஏர்போர்ட்டில் இருந்து 5 கி.மீலும், யமுனை எக்ஸ்பிரஸ்வே ஒட்டிய 12வது கி.மீலும் அரசுக்கு சொந்தமான 1,000 ஏக்கர் நிலத்தில் பிலிம் சிட்டி அமைக்கலாம் என ஒய்இஐடிஏ பரிந்துரைத்தது. அதையடுத்து, பிலிம் சிட்டி அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், உத்தேச மதிப்பீட்டை குறிப்பிடவும் கோரி வெளியிடப்பட்ட டென்டரில், சிபிஆர்இ தெற்காசிய நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

பிலிம் சிட்டியில் உருவாக்கப்படும் வசதிகள், கட்டிடங்களின் தோற்றம் உள்ளிட்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஆர்இ நிறுவனத்துக்கு ஒய்இஐடிஏ தலைமை செயல் அதிகாரி அருண் வீர் சிங் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், சிபிஆர்இ நிறுவனத்தின் விரிவான அறிக்கை அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் கிடைக்கக்கூடும் என சிங் தெரிவித்து உள்ளார். அறிக்கை கிடைத்ததும், மாநில அமைச்சரவையின் ஒப்புதல் பெற்று, அறிக்கையில் குறிப்பிடப்படும் திட்டங்களில் சிறந்த வடிவமைப்பை தேர்வு செய்து கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். முற்றிலும் அரசு நிதி என ஆலோசிக்கப்பட்ட திட்டம் தற்போது தனியார், பொதுத்துறை இணைந்த திட்டமாக மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருவதாக சிங் தெரிவித்தார். சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் சிபிஆர்இ தெற்காசிய நிறுவனம் 128ம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.




Tags : Noida Film City , Detailed report on Noida Film City will be available in March
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...