சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு: கழுத்தை கத்தியால் அறுத்து பிடிஓ தற்கொலைக்கு முயற்சி: அதிகாரிகள் டார்ச்சர் என குற்றச்சாட்டு

சிவகங்கை: சிவகங்கை, செந்தமிழ் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (59). இவர், கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வட்டார வளர்ச்சி அலுவலராக (நூறுநாள் வேலை திட்டம்) பணியாற்றி வருகிறார். நேற்று காலை பணிக்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு ரமேஷ் வெளியே சென்றார். ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த அவர், திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உணவுக்குழாய் வரை கத்தி அறுத்ததால் ரத்தம் பீறிட்டு வெளியேறி மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சிவகங்கை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். ரமேசுக்கு உயரதிகாரிகளின் டார்ச்சர் அதிகமாக இருந்ததாக தெரிகிறது. மேலும் அதிக பணிச்சுமையால் கடுமையான மன அழுத்தத்தில் ரமேஷ் இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டே ஓய்வு பெற வேண்டிய நிலையில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது அதிகரிக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். ரமேஷ் தற்கொலை முயற்சிக்கு காரணமான ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், உதவி திட்ட இயக்குநர்  இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரமேஷின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.இதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டமும் நடந்தது.

Related Stories:

>