×

கொரோனா பொது ஊரடங்கு தளர்விற்கு பின்னர் புத்தாண்டை கொண்டாட குவியும் சுற்றுலா பயணிகள்: சாம்ராஜ்நகரில் நிரம்பி வழியும் ஓட்டல், ரிசார்ட்டுகள்

சாம்ராஜ்நகர்: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் நிரம்பி வழிவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  கர்நாடகத்தில் ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் பொதுமக்கள் வந்து செல்ல அரசு அனுமதி வழங்கியது. அதே நேரம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். அதாவது சானிடைசர், முக கவசம், சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி, ஏராளமான சுற்றுலா பயணிகள் மாநிலத்திற்கு வந்து செல்லும் வண்ணம் உள்ளனர். குறிப்பாக  அண்டை மாநிலமான தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து விடுமுறையை கொண்டாட ஏராளமானவர்கள், சாம்ராஜ்நகர் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதனால் பிலிகிரிரங்கனபெட்டா, மாதேஸ்வரன் மலை, கோபாலசாமி மலை, பரசுக்கி, ககனசுக்கி, பண்டிபுரா உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. இனி வரும் நாட்களில் ஓட்டல், ரிசார்ட்டுகளை புக் செய்வதற்கு, பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம் கொரோனா பொது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டும், சுற்றுலா தளங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் உள்ள கழிப்பறைகள், மக்கள் அமரும் இடங்கள், பூங்காக்கள், ஏரிகள், ஆறுகளில் எந்தவிதமான தூய்மையும் இல்லை. குப்பைகள் வீசப்பட்ட இடத்திலேயே கிடக்கிறது. இதனால் அதிருப்தியடைந்துள்ள சுற்றுலா பயணிகள், அவற்றை தூய்மை செய்து கொடுக்கும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கு சுற்றுலாத்துறை சார்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தும், புத்தாண்டு தினம் நெருங்கும் நிலையில் இன்னும் அதே நிலை தான் நீடித்து வருகிறது. அதே நேரம் கொரோனா 2வது அலை காரணமாக மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு வந்தாலும், புத்தாண்டை இந்த முறை சிறப்பாக கொண்டாடவேண்டுமென்ற முடிவில் சாம்ராஜ்நகர் மாவட்ட சுற்றுலா தலங்களில் தங்கியிருப்பதாக, பயணிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : New Year ,curfew ,Corona ,hotels ,resorts , Tourists flock to celebrate the New Year after the Corona general curfew: hotels and resorts overflowing in Samrajnagar
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!