×

பிரசாத் ஸ்டுடியோவுக்கு போகாத இளையராஜா: அறை கதவை உடைத்து பொருட்கள் அகற்றப்பட்டு இருந்ததால் பரபரப்பு

சென்னை: தமிழ் சினிமாவில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இந்த ஸ்டுடியோவை விட்டு இளையராஜா வெளியேற வேண்டும் என்று நிர்வாகம் அறிவித்தது. இதை  தொடர்ந்து, இடத்தை காலி செய்வது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே வழக்கு  நடந்தது. இந்நிலையில், ஸ்டுடியோவில் உள்ள தன் கைப்பட எழுதிய இசைக்கோர்ப்புகள், இசைக்கருவிகள்,  விருதுகள் போன்ற பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும்,  தியானம் செய்ய அனுமதி தர வேண்டும் என்றும் இளையராஜா நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

முதலில்  இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஸ்டுடியோ தரப்பு, பிறகு சில நிபந்தனைகளுடன்  ஒப்புதல் அளித்தது. அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட இளையராஜாவுக்கு  ஸ்டுடியோவில் ஒருநாள் காலை 9 மணி முதல் 4 மணி வரை தியானம் செய்யவும், தனது  உடைமைகளை எடுத்துக்கொள்ளவும் அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று காலை 9 மணிக்கு இளையராஜா தனது  வழக்கறிஞருடன் பிரசாத் ஸ்டுடியோ செல்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இளையராஜாவின் அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு,  அங்கிருந்த அவரது பொருட்கள் அகற்றப்பட்டதாககூறப்பட்டது.

இதுபற்றி அறிந்த இளையராஜா மன  உளைச்சலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது. இதனால், அவர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்லவில்லை. அவரது உதவியாளர்கள் மட்டும் லாரிகளுடன் அங்கு சென்றனர். அங்கு, இளையராஜா பயன்படுத்தி வந்த அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கு இருந்த பத்ம பூசன் விருது உள்ளிட்ட அவரது பொருட்களை அகற்றி வெளியில் உள்ள குடோனில் போடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.


Tags : Ilayaraja ,Prasad Studio , Prasad Studio, Ilayaraja
× RELATED ஆமாம், நான் எல்லோருக்கும்...