எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் ஆயுதமானது அமலாக்கத்துறை: சஞ்சய் ராவத் அதிரடி

மும்பை: எதிர்க்கட்சியினரின் குடும்பத்தினரை பழிவாங்கும் ஆயுதமாக சிபிஐ, அமலாக்கத்துறையை அரசு பயன்படுத்துகிறது,’’ என்று சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் பிரவீன் ராவத்தின் மனைவி கணக்கில் இருந்து சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத்தின் கணக்கிற்கு 55 லட்சம் பண பரிவர்த்தனை நடந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், வர்ஷா இன்று நேரில் ஆஜராக வலியுறுத்தி அமலாக்கத்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது.

இது குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் கூறியதாவது: மகா விகாஷ் அங்காடி கூட்டணியின் அரசைக் கவிழ்க்கும் விவகாரத்தில் வெற்றி பெற முடியாத நிலையில், அதற்கு முக்கிய காரணமாக இருந்த எனக்கு அழுத்தம் கொடுக்கவே, 10 வருடங்களுக்கு பின்பு, அமலாக்கத்துறை, இந்த 55 லட்சம் பண பரிவர்த்தனை பற்றி விசாரணை நடத்துகிறது.

எனது மனைவிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருப்பது, பாஜ.வுக்கு என் மீதுள்ள வெறுப்பை காட்டுகிறது. இதே பாணியில் சிவசேனா தகுந்த பதிலடி கொடுக்கும். சிபிஐ அனுப்பிய சம்மனில், பிஎம்சி வங்கி அல்லது எச்டிஐஎல் நிதி முறைகேடு என எதுவும் குறிப்பிடாத நிலையில், இதற்காக தான் சம்மன் அனுப்பப்பட்டது என்று பாஜ தலைவர்களுக்கு மட்டும் எப்படி தெரியும்? அரசு எதிர்க்கட்சியினரின் குடும்பத்தை பழிவாங்கும் ஆயுதமாக சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: