×

பெயர் பலகை வைப்பதில் கோஷ்டி மோதல்

திருமலை: ஆந்திர மாநிலம் தற்காலிக தலைநகர் அமராவதி அடுத்த வெலகம்புடியில் வரவேற்பு நுழைவு வாயிலில் பெயர் பலகை வைப்பதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ஒருவர் பலியானர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநில தற்காலிக தலைநகரான அமராவதியில் மாநில தலைமை செயலகம் வெலகம்புடியில் அமைந்துள்ளது. அங்குள்ள சாலையில்  நுழைவு வாயிலில்  வைத்துள்ள வரவேற்பு பலகையில் யார்  பெயர் பொறிப்பது என்பதில் கடந்த சில நாட்களாக அப்பகுதியைச் சேர்ந்த இரு பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் நேற்று முன்தினம் இரவு மோதலாக வெடித்தது.

அப்போது இரு தரப்பினரும் கற்கள், உருட்டு கட்டைகள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் சரமாரி தாக்கி கொண்டனர். இந்த மோதலில் மாரியம்மா என்ற பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற வெலகம்புடி போலீசார் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோதல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Tags : Wrestling clash , Name board, conflict
× RELATED டெண்டர் எடுப்பதில் அதிமுகவில் கோஷ்டி...