2வது இன்னிங்சில் ஆஸி. திணறல் மெல்போர்னில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசம்: பந்துவீச்சாளர்கள் அசத்தல்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்டில், முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாகி உள்ளது. இந்தியா  ஆஸ்திரேலியா அணிகள் மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவிய நிலையில், 2வது டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னுக்கு சுருண்டது.

அடுத்து களமிறங்கிய இந்தியா, 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்திருந்தது. ரகானே 104 ரன், ஜடேஜா 40 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ரகானே 112 ரன் எடுத்த நிலையில் (223 பந்து, 12 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அரை சதத்தை நிறைவு செய்த ஜடேஜா, 57 ரன் எடுத்து (159 பந்து, 3 பவுண்டரி) ஸ்டார்க் வேகத்தில் கம்மின்ஸ் வசம் பிடிபட்டார். உமேஷ் 9 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அஷ்வின் 14 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

பூம்ரா சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 32 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட் சரிந்தது குறிப்பிடத்தக்கது. சிராஜ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஸ்டார்க், லயன் தலா 3, கம்மின்ஸ் 2, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 131 ரன் பின்தங்கிய நிலையில் ஆஸி. அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜோ பர்ன்ஸ் 4 ரன் மட்டுமே எடுத்து உமேஷ் வேகத்தில் விக்கெட் கீப்பர் பன்ட் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த லாபுஷேன் 28 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ரகானே வசம் பிடிபட்டார்.

அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித் 8 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கிளீன் போல்டாக, ஆஸி. அணி தடுமாறியது. இந்த நிலையில், மேத்யூ வேடு  டிராவிஸ் ஹெட் இணைந்து 4வது விக்கெட்டுக்கு ஸ்கோரை உயர்த்த கடுமையாகப் போராடினர். 43.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்திருந்த ஆஸ்திரேலியா, மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்ந்த நிலையில் 3 விக்கெட்டை பறிகொடுத்து 99 ரன்னுக்கு 6 விக்கெட் என திடீர் சரிவை சந்தித்தது.

வேடு 40 ரன் (137 பந்து, 3 பவுண்டரி), ஹெட் 17 ரன், கேப்டன் டிம் பெய்ன் 1 ரன்னில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன் சேர்த்து தோல்வியின் பிடியில் சிக்கியுள்ளது. கேமரான் கிரீன் 17 ரன், பேட் கம்மின்ஸ் 15 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 2, அஷ்வின், சிராஜ், உமேஷ், பூம்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

கை வசம் 4 விக்கெட் இருக்க, 2 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள ஆஸி. அணி இன்று 4ம் நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. அந்த அணியை விரைவாக சுருட்டி, அடிலெய்டில் அடைந்த படுதோல்விக்கு பழிதீர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகி உள்ளதால் இந்திய வீரர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Related Stories:

>