×

10 ஆண்டுகளில் சிறப்பான செயல்பாடு: தோனி, கோஹ்லிக்கு ஐசிசி விருது

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சார்பில் கடந்த 10 ஆண்டுகளில் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தலைசிறந்த வீரர் என இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனிக்கு ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருது கிடைத்துள்ளது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் அடங்கிய கனவு அணிகளை ஐசிசி நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இந்திய வீரர்கள் அதிக அளவில் தேர்வான நிலையில், விருது பெறும் வீரர் வீராங்கனைகள் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர் என இரண்டு விருதுகளை விராத் கோஹ்லி தட்டிச் சென்றார். விருதுக்கான காலகட்டத்தில் அவர் 66 சர்வதேச சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரருக்கான விருது ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கிடைத்துள்ளது. டி20 போட்டிகளுக்கான சிறந்த வீரர் விருதை ஆப்கானிஸ்தான் சுழல் நட்சத்திரம் ரஷித் கான் பெறுகிறார். கிரிக்கெட் நெறிமுறைகளை கடைப்பிடித்ததற்கான ‘ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட்’ விருதுக்கு இந்திய அணி முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2011ல் நாட்டிங்காமில் நடந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்ஸ்மேன் இயான் பெல் சர்ச்சைக்குரிய வகையில் ரன் அவுட்டானபோது, அவரை மீண்டும் பேட் செய்யுமாறு பெருந்தன்மையுடன் அழைத்ததற்காக இந்த விருது தோனிக்கு வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் நடந்த வாக்கெடுப்பில் ரசிகர்கள் ஒருமனதாக அவரை தேர்வு செய்தனர். பெர்ரி ஹாட்ரிக்! தசாப்தத்தின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்த வீராங்கனை என 3 விருதுகளையும் ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி கைப்பற்றியுள்ளார்.


Tags : ICC ,Kohli ,Dhoni , Dhoni, Kohli, ICC, Award
× RELATED எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில்...