×

அசாம் சட்டப்பேரவையில் மதரஸாக்களை பள்ளியாக மாற்றும் மசோதா தாக்கல்

கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜ ஆட்சி நடந்து வருகிறது. மாநில சட்டப்பேரவையில் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், மாநில அரசு நடத்தும் மதரஸா பள்ளிகளை ரத்து செய்யும் மசோதாவை மாநில கல்வி அமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ் தாக்கல் செய்தார். அவர் கூறுகையில், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டிருப்பதன் மூலம், ஏற்கனவே, நடைமுறையில் உள்ள அசாம் மதரஸா கல்வி மயமாக்கல் சட்டம் 1995, அசாம் மதரஸா கல்வி மயமாக்கல் ஊழியர்களின் சேவை மற்றும் மதரஸா கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு சட்டம் 2018 ஆகியவை ரத்து செய்யப்படும்.

இந்த மசோதா தனியார் நடத்தும் மதரஸாக்களை கட்டுப்படுத்தவோ அல்லது ரத்து செய்யவோ கொண்டு வரப்படவில்லை. மாநிலத்தில் அரசு நடத்தும் 610 மதரஸா பள்ளிகளும் வரும் 2021, ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு செயல்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணி நிலை ஊழியர்களின் ஊதியம், கொடுப்பனவுகளில் எந்த மாற்றமும் இல்லாமல் வழங்கப்படும்,’’ என்று தெரிவித்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்தனர். அசாமில் மதரஸாக்கள் மற்றும் சமஸ்கிருத பள்ளிகளை பொதுப் பள்ளியாக மாற்ற அம்மாநில அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. ஆனால் நேற்றைய மசோதாவில் சமஸ்கிருத பள்ளிகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை. ஆண்டுதோறும் 610 மதரஸாக்களை நடத்த அசாம் அரசு 260 கோடி செலவழித்து வருவதாக அமைச்சர் பிஸ்வாஸ் கூறி உள்ளார்.

Tags : Bill ,madrassas ,schools ,Assam Legislative Assembly , Assam, Legislators
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...