×

கலால்துறை போலீசாருக்கு சம்பளம் உயர்த்த பரிந்துரை: அமைச்சர் நாகேஷ் தகவல்

பெங்களூரு: போலீசாருக்கு இணையாக கலால் துறை போலீசாருக்கும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று அமைச்சர் எச்.நாகேஷ் தெரிவித்தார். பெங்களூருவில் இது தொடர்பாக அமைச்சர் நாகேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராகவேந்திரா அவுராத்கர் குழுவின் பரிந்துரையின் பேரில் போலீசாருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலால் துறை போலீசாரும் எங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.  இது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்க விரைவில் குழு அமைக்கப்படும். அதே போல் கலால் துறை போலீசாருக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். போலீசாருக்கு வழங்கப்படும் சம்பளம், கலால்துறை போலீசாருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்து ஆய்வு நடத்தப்படும்.

இத்துடன் வெளிமாநிலங்களில் கலால் துறை போலீசாருக்கு வழங்கப்படும் சம்பளம் தொடர்பாக ஆய்வு நடத்தி அதை நிதி குழு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இது விரைவில் நடைபெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதேபோல் இதற்கு அமைச்சரவை கூட்டத்திலும் ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. போலீசாரும், கலால் துறை போலீசாரும் ஒரே மாதிரியான பணிகள் செய்து வருகின்றனர். இதனால் கூடுதல் சம்பளத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது. போலீசார் 24 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். கலால் துறை போலீசார் காலை முதல் இரவு வரை பணி செய்கின்றனர். போலீசார் குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். கலால் துறை போலீசார் போலி மது விற்பனை, கடத்தல் ஆகியவற்றை தடுத்து வருகின்றனர். இருவரின் பணிகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் போலீசாருக்கு மட்டும் அதிகமான சம்பளம் வழங்கப்படுகிறது.  இதனால் கூடுதல் சம்பளத்துக்கு பரிந்துரை செய்யப்படுகிறது’’ என்றார்.

Tags : Nagesh , Recommendation to raise salaries for forensic police: Minister Nagesh informed
× RELATED நாகேஷ் பேரன் ஹீரோவாக அறிமுகமாகும் வானரன்