×

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.2 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, விமான நிலையத்தில் எலக்ட்ரானிக் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நிழல் ரவி என்பவர், முதல் தளத்தில் உள்ள ஏரோபிரிட்ஜ் அருகே உள்ள கழிவறையிலிருந்து ஒரு பையுடன் வெளியே வந்தார். அங்கு பணியிலிருந்த பாதுகாப்பு அதிகாரி, சந்தேகத்தின் பேரில் நிழல் ரவியை நிறுத்தி பையில் என்ன இருக்கிறது, என்று விசாரித்துள்ளார். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, அதில் 3.2 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.8 கோடி. இதையடுத்து, அந்த ஒப்பந்த ஊழியரை சுங்கத்துறையிடம் ஒப்படைத்தார். அவர்கள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து, ஒப்பந்த ஊழியர் நிழல் ரவியை கைது செய்தனர். இதேபோல், விமான நிலைய கழிவறையில் மறைத்து வைத்திருந்த ரூ.3.6 கோடி மதிப்புடைய 5.1 கிலோ கடத்தல் தங்க கட்டிகளை வெளியே எடுத்து வந்து, கடத்தல் ஆசாமியிடம் கொடுத்த விமான நிலைய ஊழியர்கள் 3 பேர் உட்பட 5 பேரை கடந்த மாதம் சுங்கத்துறை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Dubai , Seizure of 3.2 kg gold nuggets smuggled from Dubai
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...