சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு காங்கிரஸ் எந்த தியாகத்தையும் செய்ய தயார்: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: ”சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றிக்கு எந்த தியாகத்தையும் செய்ய தயார்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸின் 136வது ஆண்டு நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி நினைவு கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்ல பிரசாத், முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, எம்பிக்கள் ஜெயக்குமார், செல்லக்குமார், ஊடக துறை தலைவர் கோபண்ணா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், அரும்பாக்கம் க.வீரபாண்டியன், சிவராஜசேகரன், ரூபி மனோகரன் மற்றும் எம்.பி.ரஞ்சன் குமார், நாஞ்சில் பிரசாத், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சேவாதள தலைவர் குங்பூ விஜயன் தலைமையில் சேவாதள அணிவகுப்பு நடந்தது.

தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: முதல்வர், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை ஆளுநரிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இந்த புகார் மீது கவர்னர் உடனடி நடவடிக்கை எடுத்து விசாரணையை தொடங்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அனைவரும் பாடுபட வேண்டும். கூட்டணி கட்சி வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சி எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது. தேசத்திற்காக சிறைக்கு சென்று காங்கிரஸ் தலைவர்கள் தியாகம் செய்தார்கள். திமுக கூட்டணி மதசார்பின்மை என்ற நேர்க்கோட்டில் ஒன்றாக இருக்கிறோம். ரஜினி அரசியல்வாதி அல்ல. ஆன்மீக வாதி. முதல்வராக வர விருப்பமில்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>