×

நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டமாக மயிலாடுதுறை உதயமானது

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று தொடங்கி வைத்தார். நிர்வாக வசதிக்காகவும், மக்களுக்கு அரசின் திட்டங்கள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழ்நாட்டின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 7ம் தேதியன்று அரசாணை வெளியிடப்பட்டது. மேலும், இதற்காக சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, புதிய மாவட்டம் தோற்றுவிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தை முதல்வர் நேற்று காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இப்புதிய மாவட்டமானது, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள், மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி ஆகிய நான்கு வருவாய் வட்டங்கள், 15 வருவாய் குறு வட்டங்கள் மற்றும் 287 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Nagapattinam district ,Mayiladuthurai , Mayiladuthurai was formed as a new district by dividing Nagapattinam district
× RELATED பெண் போலீசுடன் தனிமையில் இருந்த...