×

தனது காரை பறிமுதல் செய்ததால் ஆத்திரம் ரோந்து வாகனத்தை கடத்தி விபத்து ஏற்படுத்திய போதை டாக்டர் கைது: 5 கி.மீ தூரம் விரட்டி போலீசார் மடக்கினர்; கீழ்ப்பாக்கத்தில் சினிமா பாணியில் பரபரப்பு

சென்னை: வாகன சோதனையில் தனது காரை போலீசார் பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த போதை டாக்டர் ஒருவர், போலீசாரின் ரோந்து வாகனத்தை கடத்தி, ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்படுத்தினார். இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தால் கீழ்ப்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கீழ்ப்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில் போக்குவரத்து போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.30 மணிக்கு சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே அதிவேகத்தில் வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது, கார் போலீசாரை மோதுவது போல் வந்து நின்றது. உடனே போலீசார், காரின் அருகே சென்றபோது மது வாடை வீசியது. இதனால் போலீசார் காரை ஓட்டி வந்த நபரை கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அவரால் கீழே இறங்க முடியாத படி மது போதையில் இருந்தார். அதை தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில், ராணிபேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை டவுன் ஹால் தெருவை சேர்ந்த முத்துவிக்னேஷ்(31) என தெரியவந்தது. டாக்டரான இவர் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவது தெரியவந்தது.

இதனால் போதையில் இருந்த அவரை, குடிபோதையில் வாகனம் ஓட்டியது என்று போலீசார் வழக்கு பதிவு செய்தும், கைது செய்யாமல் காரை மட்டும் பறிமுதல் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால் போதையில் இருந்த டாக்டர் பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை தன்னிடம் கொடுக்கும் படி வெகு நேரம் நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் மீது கோமடைந்த டாக்டர் சாலையில் நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 3.45 மணிக்கு பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈகா சிக்னல் அருகே வரும் போது, போக்குவரத்து போலீசார் நிறுத்தி வைத்திருந்த (இனோவா) ரோந்து வாகனம் நின்று கொண்டிருந்ததை பார்த்துள்ளார். கார் சாவியும் காரிலேயே இருந்தது.

போலீசார் தன்னை நடக்க விட்டதால் ஆத்திரமடைந்த டாக்டர் ரோந்து வாகனத்தை எடுத்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத போக்குவரத்து போலீசார் ரோந்து வாகனத்தின் பின்னால் வெகு தூரம் ஓடினர். ஆனால் டாக்டர் முத்து விக்னேஷ் குடிபோதையில் இருந்ததால் வாகனத்தை அசுர வேகத்தில் சாலையில் தாறுமாறாக ஓட்டிச்சென்றார். பின்னால் ஓடிய போலீசார் அவ்வழியாக வந்த பாபு என்பவரின் காரை வழிமறித்து ஏறி கடத்தப்பட்ட ரோந்து வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது போதையில் இருந்த டாக்டர் முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு காருடன் தப்பிக்க முயன்றார்.

விடாமல் பின் தொடர்ந்து ஒரு வழியாக கடத்தப்பட்ட ரோந்து வாகனத்தை 5 கீலோ மீட்டர் தொலைவில் மடக்கி பிடித்தனர். மேலும், ரோந்து வாகனத்தை கடத்திய டாக்டர் முத்து விக்னேஷை தங்களது பாணியில் விசாரித்து பிறகு கீழ்ப்பாக்கம் போலீசாரிடம் போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சம்பவம் குறித்து போக்குவரத்து காவலர் சுந்தர்(31) கீழ்ப்பாக்கம் காவ்ல நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் காரை கடத்திய டாக்டர் முத்து விக்னேஷ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சினிமா காட்சிகள் போல் கீழ்ப்பாக்கத்தில் போலீசாரின் ரோந்து வாகனம் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Tags : Drug doctor , Drug doctor arrested for hijacking patrol vehicle after seizing his car Cinematic style sensation in the subconscious
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...