×

அதிமுக கட்சி பணம் தொடர்பான விவகாரம் அமைச்சர் துரைக்கண்ணு மகன் விளக்கம்

சென்னை: அதிமுகவின் கட்சி பணம் தொடர்பான விவகாரத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் டி.சண்முகபிரபு சார்பில் அவரது வக்கீல் கே.கௌதம் அனுப்பியுள்ள விளக்க நோட்டீசில் கூறியிருப்பதாவது: வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர் துரைக்கண்ணு. கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த அக்டோபர் 31ம் தேதி காலமானார். அவரது மறைவால் குடும்பமே அதிர்ச்சியில் உள்ளது.

இந்த நிலையில், மறைந்த அமைச்சரிடம் கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும், அந்த தொகை எங்கே என்றும் சொத்து குவிப்பு பைலை லஞ்ச ஒழிப்பு துறை தூசி தட்டி எடுத்ததாகவும் செய்திகள் வந்துள்ளது. இந்த செய்தி உண்மைக்கு மாறாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அமைச்சரிடம் கொடுத்த ரூபாயில் பாதியை அமுக்கிய நிர்வாகிகளிடம் போலீஸ் மூலம் விசாரிக்க திட்டம் என்ற செய்தியும் நாளிதழில் வெளிவந்துள்ளது. இந்த செய்தியை பார்த்ததும் உண்மையிலேயே வருத்தமடைந்துள்ளேன். எனது தந்தை அமைச்சராக இருந்த காலத்தில் செய்தியில் வெளிவந்தமாதிரி எதுவும் நடைபெறவில்லை. இதுபோன்ற செய்தி உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

அதுமட்டுமல்லாமல், துரைக்கண்ணு அண்ணன் மகன், மகள் வீட்டில் பணம் பதுக்கல்?, துரைக்கண்ணு கொடுத்த பணம் சொத்துக்களாக மாறியது அம்பலம் என்ற தலைப்புகளிலும் செய்திகள் வெளிவந்தன. இதுபோன்ற செய்திகள் எனது தந்தைக்கு கட்சியின் தலைமை, கட்சி நிர்வாகிகளிடம் உள்ள மரியாதைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த செய்திகளால் எங்கள் குடும்பத்தினருக்கும் அவமரியாதை ஏற்பட்டுள்ளது. அமைச்சர்களிலேயே மிகவும் எளிமையான, நேர்மையானவராக அமைச்சர் துரைக்கண்ணு செயல்படுகிறார் என்று  ஆளுநர் பாராட்டியுள்ளார். அதற்கு மாறாக அமைச்சர் துரைகண்ணு மீது தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வந்துள்ளது.

இந்த செய்திகளால் மறைந்த அமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. செய்தியை படித்த அதிமுக கட்சியினர் பலர் என்னை தொடர்பு கொண்டு விசாரித்தனர். அவர்களிடம் இது பொய்யான செய்தி என்று விளக்கம் தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். கற்பனையாக எந்த குற்றச்சாட்டுகளையும் வைத்துவிடக்கூடாது. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்போல் எனது தந்தை அதிமுகவிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை. உண்மைக்கு புறம்பாக வெளிவந்துள்ள இந்த செய்திகளில் உண்மையில்லை என்பதை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

Tags : Durakkannu ,AIADMK , Minister Durakkannu's son explains the issue related to AIADMK money
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...