×

இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த 6 பேருக்கு புது வகை கொரோனா: வேகமாக பரவும் ஆபத்து உள்ளதால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்; முதல்வர் எடப்பாடி அவசர ஆலோசனை

சென்னை: லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் 6 பேருக்கு நடத்திய கொரோனா சோதனை முடிவுகளில் ஆர்என்ஏ மாறுதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது மக்களிடம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது. இதில், சில தடுப்பூசிகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் அவசர கால பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் 2021 ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேசமயம், தமிழகத்திலும் கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருகிறது. தினசரி 1000 பேருக்கு என்ற அளவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மரபு மாற்றம் அடைந்த புதுவகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த அந்த நாட்டில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகிறது. இதேபோன்று, இந்தியாவிலும் அந்நாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை மற்றும் தமிழகத்தின் அனைத்து விமான நிலையங்களிலும் இங்கிலாந்தில் இருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஞாயிற்று கிழமை வரை லண்டனில் இருந்து வந்த 2,300 பயணிகளில் 1,437 பயணிகளுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. இதில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தனி வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து வந்து கொரோனா தொற்று உறுதி செய்யபட்டவர்களில் 6 பேரின் மாதிரிகளில் ஆர்என்ஏ மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் புதிய கொரோனா தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. ஆனாலும் இவர்களுக்கு செய்யப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில் 6 பேரின் மாதிரிகளில் ஆர்என்ஏ மாறுதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான முழுமையான ஆய்வு புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி இவர்களின் மாதிரிகள் அனைத்தும் புனே ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வை மத்திய அரசு மேற்கொள்கிறது. எனவே இது புது வகை கொரோனா தொற்றா இல்லையா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினர்.

இதற்கிடையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை, தலைமைச் செயலகத்தில், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக காணொலிக் காட்சி மூலம் கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, டாக்டர் சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை இயக்குனர் திரிபாதி உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசியதாவது: கடலூர், நாகப்பட்டினம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் மிகக் கனமழை ஏற்பட்டதால் வயல்களில் நீர் நிரம்பி பயிர்கள் பாதிப்படைந்ததை நேரில் ஆய்வு செய்தபோது, விவசாயிகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, இழப்பீட்டை ஆய்வு செய்யும் பணி வேளாண் துறை மூலமாக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்படும்.

தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதுவிதமான கொரோனா நோய்த் தொற்று தமிழ்நாட்டிற்கு பரவி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதுவரை கண்டறியப்பட்டுள்ள 13 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு புனாவிற்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு தான் உருமாறிய வைரஸ் தொற்று உள்ளதா எனக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை அளிக்க முடியும். இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றும் முகக்கவசம் அணியாத காரணத்தால் தான் ஏற்படுகிறதென்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவற்றையெல்லாம் பொதுமக்கள் கவனமாக எடுத்துக்கொண்டு, அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். வெளியில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென்று மீண்டும், மீண்டும் வலியுறுத்தி பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன். புத்தாண்டு, தைப்பொங்கல் பண்டிகைகள் வருவதால், தொடர் கண்காணிப்பை மாவட்ட நிர்வாகமும், சுகாதாரத் துறையும் விழிப்புடன் கண்காணித்து செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பொதுமக்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும். அவ்வாறு அணியத் தவறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படுமென்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று, நிவர் மற்றும் புரெவி புயலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டாக்டர் ரங்கராஜன் கமிட்டி அளித்த ஆலோசனைகள் அடிப்படையில் வருகிற தைப்பொங்கலை அனைத்து இல்லங்களிலும் சிறப்பாகக் கொண்டாட, சுமார் 2.06 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் முழுக்கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படுமென்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டு அந்தப் பணி ஜனவரி 4ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். இந்நோய்த் தொற்று ஏற்பட்ட காலகட்டத்திலும் 74 புதிய தொழில்கள் தமிழகத்தில் தொடங்குவதற்கு நாம் முனைப்போடு செயல்பட்டோம். அதன் மூலம் 61,500 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

* கொரோனா செலவு 7,500 கோடி
கொரோனா நோய் தொற்றுப் பரவல் இந்தியாவின் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்துள்ளது. கோவிட் நோய் தொற்று கட்டுப்பாடு, சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இதுவரை 7,544 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

* லண்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 13 பேருக்கு தொற்று
தமிழகத்தில் நேற்று மட்டும் 63,242 சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 1005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்து வந்த 13 பேர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்து 13 என்று மொத்தம் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,15,175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7,94,228 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நேற்று மட்டும் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,080 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Chief Minister ,England ,Tamil Nadu ,spread ,Edappadi Emergency Consultation , New type of corona for 6 people who came to Tamil Nadu from England: Prevention measures intensified due to risk of rapid spread; Chief Minister Edappadi Emergency Consultation
× RELATED விரும்பத்தகாத தரக்குறைவான பேச்சு...