×

கொடைக்கானலில் தடையை மீறி தடுப்புச்சுவரில் ஏறி ‘செல்பி’

கொடைக்கானல்: கொடைக்கானலில் தடுப்புச்சுவர், மரங்களில் ஏறி சுற்றுலா பயணிகள் செல்பி எடுப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் உள்ளது. எங்கு பார்த்தாலும் சுற்றுலாப் பயணிகளின் கார்களும், சுற்றுலா பயணிகளுமாகவே காட்சி தருகின்றனர். கொடைக்கானலில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்களும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு மட்டுமே இ.பதிவு முறை நடைமுறையில் உள்ளது. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இ.பதிவு செய்த பின்னர் தான் வரமுடியும். பதிவு செய்யாத சுற்றுலா பயணிகள் கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் உள்ள சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். எனவே இ.பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் செல்பி மோகத்தால் விபரீதத்தை விலைக்கு வாங்கி வருகின்றனர். விழும் நிலையில் உள்ள மரங்களில் ஏறி செல்பி எடுப்பது, மோயர் பாயிண்ட் போன்ற ஆபத்தான பகுதிகளில் தடுப்பு வேலிகளில், சுவர்களில் ஏறி செல்பி எடுப்பது வாடிக்கையாகி வருகிறது. இது போன்ற ஆபத்தான சூழலை தவிர்ப்பதற்கு இப்பகுதிகளில் காவலர்களை நிறுத்தி தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் கார்கள் நிறுத்துவதற்கு கூடுதலான இட வசதிகளை சம்பந்தப்பட்ட துறையினர் செய்து தர வேண்டும். போதுமான அளவு சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்தங்கள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கூடுதல் போலீசார் பணியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Tags : Selpi ,Kodaikanal , selfie
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...