×

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா!: வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வர அந்நாட்டு அரசு தடை..!!

டோக்கியோ: இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸின் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் வெளிநாட்டினர் ஜப்பானுக்கு வர அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாட்களாக புது வகையான கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த புதுவகை வைரஸானது முன்பிருந்த கொரோனா வைரஸை விட மிக எளிதில் பரவுகிறது என தெரியவந்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக இங்கிலாந்து நாட்டுடனான விமான போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸின் பரவலை தவிர்க்கும் வகையில் ஜப்பான் நாட்டில் ஜனவரி மாதம் இறுதி வரை வெளிநாட்டினர் வருவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டனில் இருந்து ஜப்பான் திரும்பிய 5 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. டோக்கியோ நகரிலும் புதிய வகை கொரோனா தொற்று சிலருக்கு உறுதியானது. இதனை அடுத்து ஜப்பான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இங்கிலாந்திலும் வைரஸ் பாதிப்பு அதிகமாக ஏற்பட்டது. அதன்பின் பாதிப்பு குறைந்ததால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதற்கிடையே இங்கிலாந்தில் லண்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. வைரசின் இந்த புதிய மாறுபாடு வீரியமிக்கதாக இருக்கிறது. இதனால் வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவுகிறது. இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : foreigners ,Government ,UK ,Japan , UK, new type Corona, foreigners, Japan, ban
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது