×

காட்டில் காயத்துடன் உலா: யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க கும்கிகள் வரவழைப்பு

ஊட்டி மசினகுடி பொக்காபுரம் அருகே காயத்துடன் உலா வரும் காட்டு யானைக்கு கும்கிகள் உதவியுடன் மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டத்திற்குட்பட்ட பொக்காபுரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று அண்மையில் காயத்துடன் உலா வந்தது. வனத்துறையினர் அந்த யானைக்கு பழங்களில் மருந்து, மாத்திரை வைத்து கொடுத்து சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த இரு வாரங்களாக யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதன் காரணமாக யானை உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. குடியிருப்பை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து யானை உலா வரும் நிலையில், பொதுமக்கள் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. தொட்டிலிங்கி அருகே யானை அடிக்கடி உலா வருகிறது.

இந்த நிலையில் உடலில் ஏற்பட்டுள்ள காயத்தால் ஏற்படும் வலி காரணமாக கோபமடைந்து பொதுமக்களை தாக்க கூடிய அபாயம் உள்ளதால் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சை அளிப்பது குறித்து உயரதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் காட்டு யானைக்கு மயக்க மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்க முதன்மை தலைமை வன பாதுகாவலர் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கவுசல் அறிவுறுத்தலின் பேரில் யானைக்கு சிகிச்சை அளிக்க வசதியாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து சுஜய், வாசிம் ஆகிய இரு கும்கி யானைகள் பொக்காபுரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக மசினகுடி கோட்ட துணை இயக்குநர் ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘கோவை வன கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமாறன் தலைமையில், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை இணை இயக்குநர் மனோகரன், முதுமலை வன கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் நாளை (இன்று) காயமடைந்த யானையை பார்வையிட்டு, காயத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்கின்றனர். பின்னர் சாதகமான சூழல் ஏற்பட்டவுடன் மயக்க ஊசி செலுத்தி யானையை பிடித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு நடக்கிறது, என்றார்.

Tags : jungle ,Kumkis , Kumkis
× RELATED 4 நக்சல்கள் பலி