×

தொடர் விடுமுறை நாட்களால் அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் அச்சம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதையொட்டி, விரைவாக தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. இந்நிலையில், தொடர் அரசு விடுமுறை அமைந்ததால், அண்ணாமலையார் கோயிலில் நேற்று தரிசனத்துக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படும் பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகரித்து காணப்பட்டது.

மேலும், வெளி பிரகாரம் வரை வரிசை நீண்டிருந்தது. முகக்கசவம் அணிதல், கிருமி நாசினியால் கைகளை தூய்மை செய்தல் போன்ற கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். சுவாமி சன்னதி, அம்மன் சன்னதிகளில் மட்டும் தரிசனம் முடித்து, தெற்கு கோபுரம் வழியாக வெளியில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், மற்ற பிரகாரங்களில் உள்ள சன்னதிகளை தரிசனம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. அதேபோல், அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனமும் ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும், சனிப் பெயர்சியை முன்னிட்டு அண்ணாமலையார் கோயில் அம்மன் சன்னதி எதிரில் உள்ள நவகிரக சன்னதியில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Tags : Devotees ,holidays ,Annamalaiyar Temple , Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...