வேளாண் சட்டம்!: மக்கள் முன்னிலையில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் விவாதிக்க தயாரா?.. அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கு..!!

டெல்லி: வேளாண் சட்டங்கள் குறித்து முழுமையாக தெரியும் என கூறும் மத்திய அமைச்சர்கள் பொதுவெளியில் விவசாயிகளுடன் விவாதிக்க தயாரா என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் நேற்று இரண்டாவது முறையாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், கடும் குளிரில் ஒரு மாதத்திற்கும் மேலாக உயிரை பணயம் வைத்து போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு விவசாயிகளை மத்திய அரசு தள்ளியதாக குற்றம்சாட்டினார். வேளாண் சட்டங்களால் ஏற்படும் நன்மைகளை கூற மறுக்கும் மத்திய அரசு, அச்சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது என்று மட்டுமே பிரச்சாரம் செய்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு புரிதல் இல்லை என கூறும் மத்திய அமைச்சர்கள், பொதுமக்கள் மத்தியில் விவசாயிகளுடன் நேரடியாக விவாதிக்க தயாரா என்றும் கேள்வி எழுப்பினார். அவ்வாறு விவாதம் நடத்தினால் வேளாண் சட்டங்கள் குறித்து யாருக்கு அதிகம் புரிதல் இருப்பது தெரியவரும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள முக்கிய எல்லையில் குவிந்துள்ள விவசாயிகள் அங்கேயே தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவாசிகளுக்கு ஆதரவாக பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் டெல்லியில் குவிந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக இருக்கும் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories:

>