ஐதராபாத்தில் 3 நாள் தீவிர சிகிச்சைக்கு பின் நடிகர் ரஜினி டிஸ்சார்ஜ் சென்னை திரும்பினார்: ஒரு வாரம் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தல்

சென்னை: ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக கடந்த 25ம் தேதி ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஐதராபாத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த 22ம் தேதி ரஜினிக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு ெகாரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

எனினும், ஐதராபாத்திலேயே ரஜினி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில், கடந்த 25ம் தேதி உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் சோர்வு காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது ரத்த அழுத்தம் சீரடைந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், நேற்று மாலை 4.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பிறகு தனி விமானம் மூலம் மாலை 6.05 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தார்.

அங்கிருந்து காரில் வீட்டுக்கு திரும்பினார்.அவருடன் மகள் ஐஸ்வர்யாவும் வந்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, உயர் ரத்த அழுத்தம், வயது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, ரஜினி ஒரு வாரம் முழுமையாக ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அடிக்கடி ரத்த அழுத்த அளவை பரிசோதிக்க வேண்டும். மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபடக்கூடாது. கொரோனா தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மேலும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>