×

திருநள்ளாறு கோயிலில் பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் நேற்று அதிகாலை நடந்த சனிப்பெயர்ச்சி விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சனி பகவானை தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி நேற்று அதிகாலை நவரத்தின அங்கி அலங்காரத்தில் மூலவர் சனி பகவான் காட்சி அளித்தார். 27 வகையான திரவிய பொருட்களால் சனி பகவானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.

இதையடுத்து 5.22 மணிக்கு சனி பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார். அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டது.சனி பகவானை தரிசனம் செய்ய கடும் குளிரிலும் இரவில் இருந்தே பக்தர்கள் கோயிலில் குவிய துவங்கினர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்தனர். மூலவரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளியுள்ள உற்சவரையும் வணங்கி விட்டு வெளியே வந்தனர்.

அதேசமயம் நளன் மற்றும் பிரம்ம தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டது. இதனால் தனியார் மற்றும் கோயிலுக்கு சொந்தமான குளியலறைகளில் நீராடிய பக்தர்கள், தாங்கள் அணிந்து வந்த ஆடைகளை குளக்கரைகளில் கழற்றி போட்டு விட்டு சென்றனர். ஆன்லைன் முன்பதிவு அவசியம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது தெரியாமல் வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் உள்ளிட்டோரும் சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Devotees ,Thirunallar temple , Devotees darshan at Thirunallar temple
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...