×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரத்தில் தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை

*31ம் தேதி பைக்கில் வர தடை
*காவல் துறை அறிவிப்பு

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள், பண்ணை வீடுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும், கடற்கரையில் பொதுமக்கள்  மற்றும் சுற்றுலா பயணிகள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட், பண்ணை வீடுகளில் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்து அதன் உரிமையாளர்களை அழைத்து தனியார் ஓட்டலில் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் கூட்டம் நடத்தினார்.

அதில் செங்கை எஸ்பி கண்ணன் பேசியதாவது, ‘புத்தாண்டு முன்னெச்சரிக்கை தடுப்பு  நடவடிக்கையாக இந்த ஆண்டு கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து முட்டுக்காடு வரை உள்ள  ஓட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட  தடை விதிக்கப்படுகிறது. மேலும், மது பார்ட்டிகள், ஆடல் பாடல் மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. கடற்கரையோரம் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகளில் தங்கி உள்ளவர்கள் கடற்கரையில் கூடுவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் மாமல்லலபுரத்திற்கு புத்தாண்டு கொண்டாட வருபவர்கள் 31ம் தேதி இரவு 10 மணிக்கு முன்னரே புக் செய்த அறைகளில் வந்து தங்க வேண்டும்.

புக் செய்த அறைகளில் தங்குவதற்கு எந்த வித கட்டுப்பாடும் இல்லை. நீச்சல் குளங்கள் இயங்கவும், வாண வேடிக்கை உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அறை எடுத்து தங்குபவர்கள் தங்கிய அறைகளிலேயே புத்தாண்டு கொண்டாடி கொள்ளலாம். இ.சி.ஆர் சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 10 தற்காலிக சோதனை சாவடிகள் அமைத்து வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படும். 500 சிசிடிவி கேமரா காட்சிகள் போலீசாரால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். 31ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் சென்னையில் இருந்து வரும் இரு சக்கர வாகனங்கள் திருப்பி அனுப்பப்படும்.

மேலும், அறை புக் செய்பவர்களிடம் அடையாள அட்டையின் நகல் பெற வேண்டும் தனி நபர்கள் வந்தால் அறைகள் வழங்க கூடாது. இவ்வாறு கூட்டத்தில் செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறினார். இந்த தடையை மீறினால், உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி எச்சரித்து அனுப்பினார். இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் ஓட்டல்கள், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Hostels ,farm houses ,Mamallapuram , Hostels and farm houses in Mamallapuram banned for entertainment ahead of the English New Year
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...