×

நெற்குன்றம் அரசு பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்

அண்ணாநகர்: கோயம்பேடு அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு, அரசு பள்ளி மற்றும் குடியிருப்புகளுக்கு அருகில் புதிதாக டாஸ் மாக் கடை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் முறையிட்டதுடன், கோயம்பேடு போலீசில் புகாரும் அளித்துள்ளனர். ஆனால், அதை மீறி டாஸ்மாக் கடை திறக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று சாலை மறியலில் ஈடுப்பட்டனர். மேலும், அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘அரசு பள்ளி அருகிலேயே டாஸ்மாக் கடை அமைப்பதால் மாணவர்கள் எதிர்காலம் பாழாகும். மேலும், அருகில் குடியிருப்புகள் உள்ளதால் பெண்கள் யாரும் வெளியே நடமாட முடியாது. குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடை இந்த பகுதிக்கு வேண்டாம். அரசு உடனடியாக, டாஸ்மாக் கடை அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், போராட்டம் தொடரும்,’’  என்றனர். 


Tags : opening ,store ,blockade ,Tasmac ,Nerkunram Government School: Public road , Protest against opening of Tasmac store near Nerkunram Government School: Public road blockade
× RELATED சென்னை ஓட்டேரியில் டாஸ்மாக் கடையில் ஸ்வைப்பிங் மிஷின் திருட்டு..!!