நள்ளிரவில் கூவம் ஆற்றில் மணல் திருட்டு 20 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் சிறைபிடிப்பு: டிரைவர்கள் தப்பியோட்டம்

அண்ணாநகர்: கூவம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பொக்லைன் மற்றும் 20 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியை ஒட்டியுள்ள கூவம் ஆற்றில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சிலர் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திமுக பகுதி செயலாளர் பரமசிவம் தலைமையில் சம்பவ இடத்தில் திரண்டனர். அங்கு, 2 பொக்லைன்கள் மூலம் 20 லாரிகளில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டனர். அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

இதை பார்த்த லாரி டிரைவர்கள் அங்கிருந்து தப்பியோடினர். மணல் கடத்தலை மேற்பார்வையிட்ட ஜாபர் சாதிக் என்பவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர், இதுபற்றி அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் ஜாபர் சாதிக்கை ஒப்படைத்தனர். இதுகுறித்து அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்கிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories:

>