×

சதம் விளாசினார் வில்லியம்சன்: நியூசிலாந்து 431 ரன் குவிப்பு

மவுன்ட் மவுங்கானுயி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பே ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்திருந்தது. லாதம் 4, பிளண்டெல் 5, டெய்லர் 70 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 94 ரன், ஹென்றி நிகோல்ஸ் 42 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

டெஸ்ட் போட்டிகளில் வில்லியம்சன் தனது 23வது சதத்தை பதிவு செய்தார். மறு முனையில் நிகோல்ஸ் அரை சதம் அடித்தார். நிகோல்ஸ் 56 ரன் (137 பந்து, 5 பவுண்டரி), வில்லியம்சன் 129 ரன் (297 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த சான்ட்னர் 19 ரன், ஜேமிசன் 32 ரன் எடுக்க, சவுத்தீ டக் அவுட்டானார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய வாட்லிங் 73 ரன் (145 பந்து, 8 பவுண்டரி) விளாசி பெவிலியன் திரும்பினார்.

நீல் வேக்னர் 19 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்து ஆல் அவுட்டானது (155 ஓவர்). போல்ட் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகீன் அப்ரிடி 4, யாசிர் ஷா 3, அப்பாஸ், அஷ்ரப், நசீம் ஷா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 30 ரன் எடுத்துள்ளது. ஷான் மசூத் 10 ரன் எடுத்து ஜேமிசன் பந்துவீச்சில் வாட்லிங் வசம் பிடிபட்டார். அபித் அலி (19 ரன்), முகமது அப்பாஸ் (0) களத்தில் உள்ளனர். இன்று 3வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Tags : Williamson ,New Zealand , Williamson scores a century: New Zealand 431 runs
× RELATED நியூசிலாந்தில் இருந்து வந்து வாக்களித்த மருத்துவர்