விமானப்படைக்கு பலம் சேர்க்க அடுத்த மாதம் மேலும் 3 ரபேல் விமானம் வருகை? வழியில் நிற்காமல் பயணிக்கும்

புதுடெல்லி: இந்திய விமான படைக்கு பலம் சேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து அடுத்த மாதம் மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் வருகின்றன. பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 அதிநவீன ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக, கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இதன் மொத்த மதிப்பு ரூ. 59 ஆயிரம் கோடி. இந்த விமானங்கள் அனைத்தும் 2021க்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த ஜூலை 28ம் தேதி முதல் தவணையாக 5 ரபேல் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை கடந்த செப்டம்பர் 10ம் தேதி அரியானாவின் அம்பாலா விமான படைத்தளத்தில் முறைப்படி விமானப்படையில் சேர்க்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் கடந்த மாதம் இந்தியா கொண்டு வரப்பட்டன. இந்நிலையில், விமானப்படைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் 3வது கட்டமாக மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. பிரானசில் இருந்து புறப்படும் இந்த 3 விமானங்களும் எரிப்பொருள் நிரப்புவதற்காக வழியில் எங்கும் நிறுத்தப்படாது. இவை நேராக ஜாம்நகர் விமானப்படை தளத்துக்கு வந்து சேரும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>