×

உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கம் தொடக்கவிழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் சரியான உணவை உட்கொள்ளும் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனம், நடமாடும் உணவு ஆய்வகம், ஆகியவற்றை கொடியசைத்துத் துவக்கி வைத்து பேசியது: நல்ல தரமான பாரம்பரிய உணவிற்கு முன்னுரிமை அளிக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மூலம் காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு பொதுமக்களிடையே பாரம்பரிய உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய உணவுகளை மறக்காமல் அதன் நலனை பொதுமக்களிடம் கொண்டு செல்லவும் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. குறிப்பாக நம் ஊரில், நம் பகுதியில் விளையக்கூடிய பழங்கள், காய்கறிகள், கீரை வகைகளை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதன் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களை வருமுன் தடுக்க இயலும்.   

மேலும், பாரம்பரிய உணவு பழக்கத்தை மீட்டெடுக்க இந்த இயக்கம் மக்கள் இயக்கமாகவே மாற்றப்பட வேண்டும். ஆரோக்கியமான சமுதாயம் அமையவும் வழிவகுக்கும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராமு, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணம், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகை ரோகிணி, நாட்டுபுற பாடல் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி, சர்வதேச சமையல் கலை நிபுணர் ஸ்ரீபாலா, ஊட்டச்சத்து நிபுணர் பிரபா, நியமன அலுவலர் அனுராதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Launch ,Department of Food Safety , Launch of the Right Food Eating Movement on behalf of the Department of Food Safety
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!