×

கிறிஸ்துமஸ் விடுமுறையால் குமரியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

குலசேகரம்: கொரோனா காரணமாக சுமார் 9 மாதங்களாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், முக்கியமான சுற்றுலா தலங்கள் கடந்த வாரம் திறந்து விடப்பட்டன. ஆரம்பத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. இந்நிலையில் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் விடுமுறையும் வரவே சுற்றுலா தலங்கள் மீண்டும் களைகட்டியுள்ளது. குமரி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. கொரோனாவால் வீடுகளில் முடங்கி கிடந்த மக்கள், வெயிலின் சூட்டை தணிப்பதற்காகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்காகவும் நீர்நிலை சுற்றுலா தலங்களை நாடி செல்கின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாகவே திற்பரப்பு அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தநிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதல் திற்பரப்புக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் மதியத்திற்கு மேல் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாக தெரிந்தது. சுற்றுலாவினர் வந்த வாகனங்கள் நிறுத்த இடமின்றி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை மெயின்ரோட்டில் நிறுத்திவிட்டு சுமார் 1 கி.மீ தூரம் நடந்தே அருவிக்கு குளிக்க சென்றனர். இதுபோல் ஆண்கள், பெண்கள் குளிக்கும் இரு இடங்களிலும் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

மிதமான அளவு தண்ணீர் கொட்டினாலும் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வண்ணம் தண்ணீர் ஜில்லென இருந்தது சுற்றுலாவினரை மேலும் உற்சாகப்படுத்தியது. இதுபோன்று மாத்தூர் தொட்டி பாலத்திலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இங்கு கொரோனா காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையிலும், குறைந்த அளவில் பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். தற்போது அனுமதிக்கப்பட்ட 2 வார காலத்தில் மீண்டும் அதிகளவு பயணிகள் வர துவங்கி உள்ளனர். இதனால் மாத்தூர் தொட்டி பாலம் பகுதி சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.

இவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பாலத்தில் நடந்து சென்று, நடுப்பாலத்தில் நின்று பாறைகளின் வழியே தவழ்ந்து செல்லும் பரளியாற்றின் அழகையும், மலை முகடுகளையும் செல்போனில் செல்பியாகவும், புகைப்படமாகவும் எடுத்து மகிழ்ந்தனர். அதனை தொடர்ந்து பாலம் வழியாக செல்லும் சிற்றாறு பட்டணங்கால்வாய், மற்றும் அடிப்பகுதியில் செல்லும் பரளியாறு ஆகியற்றில் நீராடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமானதால் மாத்தூர் தொட்டி பாலத்தை சுற்றிலும் ஏராளமான தற்காலிக கடைகள் முளைத்துள்ளன. இங்கு விற்பனையாகிய அன்னாசி பழம், தேன், வாழை பழம் போன்றவற்றை வெளியூர் பயணிகள் ஆவலுடன் வாங்கி சென்றனர்.

கூட்டம் காரணமாக மாத்தூர் பாலம் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. குமரி மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை. இந்த அணையின் மறுபகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. பேச்சிப்பாறை அணையில் தண்ணீர் பிடிப்பு பகுதியை சுற்றியுள்ள இயற்கை வளமிக்க வனப்பகுதி, அணையிலும் உள்ள தீவு பகுதிகள் மற்றும் அதில் அடர்ந்து கிடக்கும் காடுகள் போன்றவற்றை ரசிப்பதற்கு சுற்றுலா பயணிகள் ஆசைபடுவார்கள். இவர்களை படகோட்டிகள் கட்டணம் வசூலித்து படகுகளில் ஏற்றி சென்று அணைக்காட்டை சுற்றி காட்டி வருகின்றனர். நேற்று பேச்சிப்பாறை பகுதி முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்  நிரம்பி வழிந்தது.

படகுகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்து படகுகளில்  ஏறி அனைபகுதியை சுற்றி வந்து குதூகலம் அடைந்தனர். சாலை பகுதி முழுவதும் வாகனங்கள்  நிறைந்து பெரும் நெரிசல் காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட தூரம்  நடந்து அணை பகுதிக்கு செல்லும் நிலை ஏற்பட்டது. மேற்படி 3 சுற்றுலா தலங்களும் களைகட்டியதால், கடைகளில் வியாபாராம் சூடுபிடித்தது. இதனால் கொரோனாவால் வருமானமின்றி தவித்த வியாபாரிகள் மகிழ்ச்சிஅடைந்தனர்.

பாதுகாப்பு குறைபாடு
முக்கிய சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி போன்ற சுற்றுலா தலங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வாகனங்கள் வந்து செல்கிறது. விடுமுறை நாட்களில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த சுற்றுலா தலங்களில விடுமுறை நாட்களில் அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். இதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான அத்துமீறல்கள், திருட்டு பிக்பாக்கெட் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது சுற்றுலாத்தலங்கள் கடும் கூட்ட நெரிசலில் திணறி வருகிறது. ஆனால். கூட்ட நெரிசலுக்கு ஏற்ப தேவையான போலீஸ் பாதுகாப்பு இல்லை.

இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவ்வப்போது வாகனங்களை ஒழுங்குபடுத்தி போக்குவரத்தை சரிசெய்யும் நிலை ஏற்பட்டது. கூட்ட தெரிசலை பயன்படுத்தி போதை ஆசாமிகள் எல்லை மீறும் சம்பவங்களும் நடைபெறுகிறது. இதனால் கூட்டம் அதிகமாக உள்ள இந்த விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tourist places ,Kumari ,holidays ,Christmas , Tourist places in and around Kumari for Christmas holidays
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து