×

புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும்; விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: ராஜ்நாத் சிங் பேச்சு

டெல்லி: புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லையில் இன்றுடன் 32வது நாளாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் சார்பில் 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வருமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று 40 விவசாய சங்கங்கள் வரும் 29ம் தேதி (நாளை மறுநாள்) காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன.

ஆனால், நாளை மறுநாள் நடக்கும் கூட்டத்தின் போது மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், வருகிற 30ம் தேதி சிங்கு எல்லையில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய அமைப்பினர் எச்சரித்து உள்ளனர். இந்நிலையில் இமாசல பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. முதல்வர் ஜெய்ராம் தாக்குரின் 3 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி மாநில மக்களுக்கு காணொலி காட்சி மூலம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார். அப்போது;  இமாசலப் பிரதேசத்தில் மூன்றாண்டு காலமாக முதல்வராக பொறுப்பேற்று சிறப்பாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஸ்ரீராம் தாகூரை நான் பாராட்டுகிறேன்.

இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபொழுது ஆண்டுக்கு ரூ 22,000 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக இமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான அமைச்சரவை ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இப்பொழுது இமாச்சல பிரதேசத்துக்கு 22,000 கோடி போல மூன்று மடங்கு நிர்வாக உதவிக்காக மத்திய அரசு வழங்குகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; புதிய வேளாண் சட்டங்கள் நடைமுறைக்கு வந்தபின் விவசாயிகள் வருவாய் இரட்டிப்பாகும். வருவாய் அதிகரிப்பைக் காண அடுத்த ஒன்றரை ஆண்டுகள் விவசாயிகள் காத்திருக்க வேண்டும்.

துரதிஷ்டவசமாக விவசாயத்தைப் பற்றி தெரியாதவர்கள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயத்தை அரசு எப்போதும் நிறுத்த நினைத்தது இல்லை. விளைபொருட்களை விற்பதற்கான மண்டிகள் சிறப்பாக செயல்படுகின்றன எனவும் கூறினார்.


Tags : Rajnath Singh , Farmers' incomes will double with the new agricultural laws; Those who do not know about agriculture mislead the farmers: Rajnath Singh speech
× RELATED தமிழ்நாடு என்றாலே செங்கோல் தான்: ராஜ்நாத் சிங்