×

பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் திறக்கப்படாத கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றுப்பாலம் : ஜவ்வாக இழுத்தடிக்கும் அதிகாரிகள்

நெல்லை: நெல்லை - பாளை. ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆற்றுப் பாலத்திற்கு மாற்றுப் பாலம் கட்டி, பணிகள் முடிந்தும் பல மாதங்களாகியும் போக்கு வரத்துக்கு திறக்கப்படவில்லை. கடைசி கட்டப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருவதால் திறப்பு விழா தாமதமாகி வருகிறது. நெல்லை மாநகரத்தில் நெல்லை, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்கள், 55 வார்டுகள் உள்ளன. நெல்லை மாநகரத்தில் மட்டும் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். எனினும் தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மையமாக திகழும் நெல்லைக்கு பக்கத்து மாவட்ட மக்கள் தினமும் பல்வேறு தேவைகளுக்காக வந்த வண்ணம் உள்ளனர். இதனால் நெல்லை டவுனில் தொடங்கி புரம், சந்திப்பு, கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி, பாளை. மார்க்கெட் வரை எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய ரயில்வே மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் இணைப்புச் சாலைகள், சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகின்றன.  இதில் சில பணிகள் மட்டும் நிறைவு பெற்று மக்கள் பயன்பாட்டிற்கு  வந்துள்ளன. அதுவும் குறிப்பிட்ட கால இலக்கை கடந்து முடிக்கப்பட்டது. குறிப்பாக தச்சநல்லூர் ரயில்வே மேம்பாலம், முன்னீர்பள்ளம் ரயில்வே மேம்பாலம், நெல்லை டவுன் ஆர்ச் அருகே இணைப்பு சாலை, தச்சநல்லூர்- தாழையூத்து மற்றும் பாளை. மத்திய சிறை முதல் டக்கரம்மாள்புரம் வரை சாலை விரிவாக்கம் போன்ற பணிகள் நிறைவு ெபற்று பயன்பாட்டில் உள்ளன. அதே நேரத்தில் மிக முக்கிய தேவையான பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.

குறிப்பாக அன்புநகர் ரயில் கிராசிங் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி 90 சதவீதத்திற்கு மேல் முடிந்தும் மையப்பகுதியில் இணைப்பு பணி கடந்த ஓராண்டாக நிறைவு பெறாமல் உள்ளது. இதுபோல் குலவணிகர்புரம் ரயில்வே கேட் மூடப்படும் போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த 2011ம் ஆண்டில் போடப்பட்ட துவக்கப்பணி 10 ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனிடையே மாநகரின் மையப்பகுதியாக உள்ள நெல்லை- பாளை இரட்டை நகரங்களை இணைக்கும் தாமிரபரணி ஆற்றில் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள 175 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த சுலோச்சனா முதலியார் பாலம் அருகே மாற்றுப்பாலம் கட்டும் பணி கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.

இந்த பாலத்தை 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு அதிவேகமாக பணிகள் நடந்து நிறைவு பெற்றுள்ளன. ரூ.16.5 கோடி மதிப்பில் 235 மீட்டர் நீளம், 14.80 மீட்டர் அகலத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஓரங்களில் பாதசாரிகள் நடக்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. எம்ஜிஆர் சிலை அருகே தொடங்கி அரவிந்த் கண்மருத்துமனை அருகே வரை புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் மட்டுமின்றி இதன் அருகே கொக்கிரகுளம் பழைய பலாப்பழ ஓடைபாலம் அருகிலும் புதிய இணைப்புபாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கொக்கிரகுளம் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 22 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப்பணிகள் முடிந்த நிலையில் இந்த பாலங்கள் அருகே உள்ள சாலைகளை  விரிவாக்கம் செய்ய தனி டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கின. அறிவியல் மையம் அருகே சந்திக்கும் அண்ணாசாலை விரிவாக்கப்பணி, இந்த பாலங்களின் அருகே உள்ள சாலைகளில் பாதசாரிகளுக்கான நடைபாதை, சாலையை பிரிக்கும் டிவைடர், எம்ஜிஆர் சிலை அருகே மெகா சிக்னல் அமைப்பது போன்ற பணிகள் கடந்த சில மாதங்களாக மிகவும் மந்த கதியில் நடக்கிறது.
அறிவியல் மையம் அருகே இணைப்பு பகுதியில் விரிக்கப்பட்ட ஜல்லி கற்கள் இரு மாதங்களுக்கும் மேலாக தார்தளம் அமைக்காமல் கிடப்பதால் அந்தப்பகுதியை கடக்கும் போது வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதுபோல் சாலை விரிவாக்கத்திற்காக சிறிய பழைய பாலம் அருகே தொடங்கி  தனியார் ஓட்டல் வளாகம் அருகே வரை விரிக்கப்பட்ட ஜல்லி கற்கள் மீதும் இதுவரை தார்த்தளம் அமைக்கப்படவில்லை.

இதனால் இந்தபகுதியில் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். மேலும் சாலை மைய பகுதியில் டிவைடர் வைக்கப்பட்ட பின்னர் பழைய சாலையும், பழைய இரும்புத் தடுப்புகள் அகற்றப்பட்ட இடத்தில் உள்ள பள்ளம், மேடு போன்ற காரணங்களால் இரவில் வேகமாக வரும் வாகனங்கள் தடுமாறுகின்றன. எனவே இனியும் தாமதப்படுத்தாமல் கடைசி கட்டப் பணிகளை விரைந்து முடித்து இந்த புதியபாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். நெடுஞ்சாலைத் துறை பாலம் கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்தது போன்று கடைசி கட்டப் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.  

பாலம் கட்டிய நோக்கம் நிறைவேறவில்லை
சமூக ஆர்வலர் பாரதி முருகன் கூறுகையில், நெல்ைல மாநகரில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துவிட்டது. தினமும் வரும் புது வாகனங்களை கணக்கில் கொண்டு சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள் முழுமையாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதில் ஒரு திட்டமாக கொக்கிரகுளத்தில் தற்போதுள்ள பாலத்தின் அருகே மற்றொரு புதிய பாலம் கட்டினர். பாலம் பணிகள் முடிந்து பலமாதம் ஆகியும் இந்த பாலத்தை திறக்காமல் இருப்பது நியாயம் அல்ல. கடந்த முறை  கொரோனா தடுப்பு ஆய்வுக்காக முதல்வர் வரும் போது இந்த பாலத்தை திறந்து வைப்பார் என கூறப்பட்டது.

ஆனால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது பாலத்தை தவிர்த்து அருகே உள்ள இடங்களில் நடக்கும் பணிக்காக பாலத்தை திறக்காமல் இருக்கின்றனர். பாலம் கட்டி முடித்து பல மாதங்கள் கடந்த பின்னரும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாததால் பாலம் கட்டியதன் நோக்கமே நிறைவேறாமல் உள்ளது. இதனால் புதிய பாலத்தில் செல்ல வேண்டிய வாகனங்கள் தற்போது எம்ஜிஆர் சிலையை சுற்றி பழைய பாலத்திலேயே திரும்புவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இனியும் தாமதமின்றி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும், என்றார்.

ஜனவரியில் திறக்கப்படும்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொக்கிரகுளம் புதிய பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. பிளாட்பாரம், சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மையம் அருகே உள்ள சிறிய இணைப்பு சாலையில் தார் தளம் அமைப்பது, சாலை விரிவாக்கத்திற்கான தார் தளம் அமைக்க வேண்டிய பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளது. கடந்த மாதமே முடிக்க திட்டமிட்டிருந்தாலும் இருவாரங்கள் மழை நீடித்ததால் இப்பணியை செய்யமுடியவில்லை. ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி அல்லது அதற்கு முன்னதாக பாலம் தயாராகி விடும். முதல்வர் இந்தப் பாலத்தை திறந்து ைவப்பார், என்றனர்.

சுரங்க நடைபாதை அவசியம்
கொக்கிரகுளம் அறிவியல் மையம் எதிரே இரு பஸ் நிறுத்தங்களுக்கும் இடையே சுமார் 22 மீட்டர் அளவிற்கு சாலை அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்தப்பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. அதே நேரத்தில் இருபகுதியிலும் சாலையை நடந்து கடப்பவர்களுக்கு சிரமம் உருவாகியுள்ளது. கலெக்டர் அலுவலகம் அறிவியல் மையம் வருபவர்கள் அதிகம் உள்ளனர். எனவே இப்பகுதியில் உள்ள இரு பஸ் நிறுத்தங்களுக்கு இடையே சாலையை கடக்க வசதியாக சுரங்க நடைபாதை அமைக்கவும் திட்டம் தயாரிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Kokkirakulam Tamiraparani River Bridge ,completion , It has been several months since the works were completed, Kokkirakulam Tamiraparani, river bridge
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா