தனுசில் இருந்து மகரத்துக்கு பெயர்ச்சி; திருநள்ளாறு கோயிலில் சனிப்பெயர்ச்சி கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் இன்று அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சனி பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். பின்னர் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று (27ம் தேதி) அதிகாலை தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்தார்.

சனிப்பெயர்ச்சி விழா திருநள்ளாறு கோயிலில் கோலாகலமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில், கொரோனா தடுப்பு நடைமுறைகளை அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் விழாவை நடத்திக் கொள்ளலாம் என நீதிபதி அனுமதி வழங்கினார். ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் என்ற ரிசல்ட்டுடன் வர வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. இதை நேற்று அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பக்தர்களுக்கு கொரோனா ரிசல்ட் கட்டாயம் இல்லை.

கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், உடல் வெப்பம் அதிகமாக இருந்தால், கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தியது. இதற்கிடையில் நேற்று முன்தினம் சனி பகவான் தங்க காக வாகனத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். இன்று அதிகாலை நவரத்தின அங்கி அலங்காரத்தில் மூலவர் சனி பகவான் காட்சி அளித்தார். 27 வகையான திரவிய பொருட்களால் சனி பகவானுக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. பின்னர் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடைபெற்றது. இதையடுத்து 5.22 மணிக்கு சனி பகவான், தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.

அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டது. சனி பகவானை தரிசனம் செய்ய கடும் குளிரிலும் இரவில் இருந்தே பக்தர்கள் கோயிலில் குவிய துவங்கினர். தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. முக கவசம் அணிந்து வந்த பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். கோயிலுக்குள் செல்லும் பக்தர்கள் முதலில் மூலவரை தரிசனம் செய்து விட்டு, பின்னர் வசந்த மண்டபத்தில் தங்க காக வாகனத்தில் எழுந்தருளியுள்ள உற்சவரையும் வணங்கி விட்டு வெளியே வந்தனர்.

வழக்கமாக சனிப்பெயர்ச்சி நாளன்று நளன் மற்றும் பிரம்ம தீர்த்த குளத்தில் பக்தர்கள் நீராடுவது வழக்கம். ஆனால் இன்று குளங்களில் நீராட பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. புதுவை முதல்வர் நாராயணசாமி, பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதேபோல், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள புகழ்பெற்ற திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலிலும் இன்று அதிகாலை சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதேபோல் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் சனி பெயர்ச்சி விழா இன்று அதிகாலை கோலாகலமாக நடந்தது.

Related Stories:

>