ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுமா?...கண்டுகொள்ளாத வனத்துறை

வி.கே.புரம்: தமிழகம் முழுவதும் சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் பாபநாசம் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவிகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. கொரோனா ஊரடங்கால் தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் இறுதி முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் நோய் பரவல் குறையத் துவங்கியதையடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக கடந்த இரு வாரங்களுக்கு முன் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து கொடைக்கானல், ஊட்டி, திற்பரப்பு, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குற்றாலம், களக்காடு அருவிகளில் ஆண்டின் குறிப்பிட்ட சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் விழும் நிலையில் பாபநாசம் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு அனைத்து நாட்களிலும் வந்து செல்வர். இந்த அருவிகள் அமைந்துள்ள இடம் புலிகள் காப்பக பகுதியில் உள்ளதால், இவை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு கருதி காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படும். நுழைவுக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் வனத்துறைக்கும் ஓரளவு நல்ல வருவாய் கிடைத்து வந்தது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அகஸ்தியர், மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது பிற இடங்களில் தடைகள் விலக்கப்பட்ட போதும் மணிமுத்தாறு, அகஸ்தியர் அருவிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இவற்றிற்கு பொதுமக்களை அனுமதிப்பது குறித்து வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வரும் நாட்களில் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை உள்ளிட்டவை வர உள்ளது. இந்த பண்டிகைகள் வரும் முன்னராவது இவ்வருவிகளில் குளிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று  பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories:

>