×

ஜல்ஜீவன் மிஷன் ‘தண்ணி’காட்டும் தண்ணீர் திட்டம்: நீராதாரம் இல்லாமல் தடுமாறுகிறது

நாகர்கோவில்: மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 2024ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான குடிநீர் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் தருவாயில் கிராமப்புறங்களில் பொது குழாய்களில் இருந்து தண்ணீர் எடுக்க மக்கள் வெளியே வரவேண்டியது இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. தமிழகத்தில் உள்ள 1.27 கோடி கிராமப்புற வீடுகளில் 21.85 லட்சம் வீடுகளில் ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் கீழ் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில்  13.86 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க ரூ.373.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ.373.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு கடந்த மார்ச் வரை ரூ.114.58 கோடியை பயன்படுத்தியிருந்தது. 2020-21ம் நிதியாண்டில் தமிழகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.917.44 கோடி ஆகும்.

குமரி மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 2023ம் ஆண்டுக்குள் கிராம ஊராட்சிகளில் உள்ள ஒவ்வொரு குடியிருப்பிற்கும் வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கிட மாவட்ட நிர்வாகத்தால் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஊராட்சிகள் டெபாசிட் கட்டணம் மற்றும் பயன்பாட்டு கட்டணத்திற்கு தொகை நிர்ணயம் செய்து வசூலிக்க தொடங்கின. இதற்கு பா.ஜ சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘‘ஜல்ஜீவன் திட்டத்தில் திட்ட பணிகளுக்கு தேவையான முழு தொகையையும் மத்திய அரசு சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நேரடியாக ஏற்கனவே வழங்கியுள்ளதை மறைத்து குமரி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் இந்த திட்டத்தில் இணைப்பு கேட்கும் பொதுமக்களிடம் மனம்போன போக்கில் பல ஆயிரம் ரூபாய்கள் வாங்கிக்கொண்டு குடிநீர் இணைப்புகள் வழங்கி வருகின்றன.

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் ஒவ்வொரு விதமான வைப்பு தொகையும், பங்குதொகையும் வசூலித்து வருகின்றனர். திட்டத்தில் அப்பட்டமாக விதிமுறைகள் மீறப்படுகிறது, எனவே சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும்’’ என்று பா.ஜ சார்பில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த கலெக்டர் அரவிந்த், ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக் குடிநீர் இணைப்பிற்கு கிராம ஊராட்சி மன்றத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட வைப்புத் தொகை செலுத்தப்பட வேண்டும். மேலும், இத்திட்ட வழிகாட்டி நெறிமுறைகளின்படி 50 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் குக்கிராமங்களில் மூலதனத் தொகையில் 5 சதவீதமும் பிற கிராம ஊராட்சி குக்கிராமங்களில் மூலதனத் தொகையில் 10 சதவீதமும் சமுதாயப் பங்குத் தொகையாக ஒவ்வொரு இணைப்பிற்கும் வசூலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியில் செலுத்தப்பட வேண்டும். மேலும் குடிநீர் இணைப்பு பெற்ற குடியிருப்பு வீடுகளுக்கு ஊராட்சியால் நிர்ணயம் செய்யப்பட்ட மாதாந்திரக் குடிநீர் கட்டணம் பயனாளிகளால் செலுத்தப்பட வேண்டும் என்றும் விளக்கம் அளித்தார்.

இதன் மூலம் மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற குடிநீர் இணைப்புக்கு டெபாசிட் தொகை, பங்குதொகை மற்றும் மாதாந்திர கட்டணம் ஆகிய கட்டணங்கள் ஊராட்சிகளில் கட்டாயம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் அதிகம் வசிக்கின்ற குடியிருப்பு பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் அனைத்து வீடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு நேரடியாக குழாய் இணைப்பு கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இதுவரை வீட்டின் அருகே சாலையோரங்களில் பொதுநல்லியில் இலவசமாக குடிநீர் எடுத்து வந்த ஏழை பொதுமக்கள் தாங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஊராட்சிக்கு டெபாசிட் தொகை மற்றும் பங்குதொகை செலுத்தி குடிநீருக்காக மாதம் தோறும் மாதாந்திர கட்டணமும் செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 இதற்கிடையே கோடை காலங்களில் தற்போது பயன்பாட்டில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு முழுமையாக குடிநீர் வழங்க திண்டாடும் நிலையில் அனைத்து வீடுகளுக்கும் நேரடி குடிநீர் இணைப்பு வழங்குவதும், குடிநீர் விநியோகம் செய்வதும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த திட்டத்தினை குமரி மாவட்டத்தில் செயல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் காணப்படுகிறது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 95 ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தினை அரசு செயல்படுத்த துவங்கியுள்ளது. இத்திட்டத்தில் ஒரு வீட்டுக்கான குடிநீர் இணைப்புக்கு ரூ.7500 ஒதுக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு ஊராட்சியில் 30 முதல் 50 சதவீத வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு ஏற்கனவே உள்ளது. சில ஊராட்சிகளில்  80 சதவீதம் வரை வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது ஊராட்சியில் உள்ள நீராதாரம் மூலம் வீட்டுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் தற்போதுள்ள நீராதாரத்தை வைத்து அனைவருக்கும் குடிநீர் வழங்குவது இயலாத ஒன்றாகும். இதற்கு போதுமான குடிநீர் ஆதாரங்கள் ஊராட்சிகளில் இல்லை. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த போதிய குடிநீர் ஆதாரத்தை முதலில் உருவாக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் புதிதாக கட்டப்பட வேண்டும்.

இப்படி படிப்படியாக நீர் ஆதாரத்தையும் உருவாக்கிய பின்புதான் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குவது சாத்தியமாகும். ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்குங்கள் என்று கூறுகின்றனர். ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் அரசு ஒதுக்கி இருக்கும் நிதியில் 50 சதவீத நிதியை நீராதாரத்திற்கு ஒதுக்கிட வேண்டும். இத்திட்டத்தை ஊராட்சிகள் தற்போது செயல்படுத்தினால் பொதுமக்களுக்கும், ஊராட்சி மன்றத்திற்கும் உள்ள நல்லுறவு விரிசல், நிர்வாக சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

அத்துடன் ஏற்கனவே வீட்டு குடிநீர் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்க இயலாத நிலையும் ஏற்படும். புதிதாக ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் திட்டத்தில் இணைப்புகள் கொடுக்கப்பட இருக்கும் நபருக்கும் குடிநீர் சரியாக கிடைக்காது என்ற சூழல் ஏற்படும். எனவே புதிய நீராதாரங்களை உருவாக்கி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்த பின்பு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்’ என்றனர்.

குமரியில் இலக்கு 70,281 வீடுகள்
இது தொடர்பாக கலெக்டர் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ‘கிராம ஊராட்சிகளில் மொத்தம் 2,17,763 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். இதில் 79,464 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் ஏற்கனவே உரியவாறு வைப்புத் தொகையினை பெற்று வழங்கப்பட்டுள்ளது. 1,993 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வைப்புத் தொகை வசூலிக்கப்பட்டு வரன்முறைபடுத்தப்பட்டுள்ளது. மீதி 1,36,306 வீடுகளுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட வேண்டும். 2019-20 மற்றும் 2020-21ம் நிதியாண்டிற்கு சேர்த்து 63,680 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க மாவட்ட அளவில் திட்டமிடப்பட்டது.

6,601 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் கூடுதலாக வழங்க வேண்டும் என மாநில அளவில் இத்திட்ட செயலாக்க அலகின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி  பிற திட்டங்களில் ஒருங்கிணைத்து 6,601 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. அந்தவகையில் குமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் 70,281 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Jaljivan Mission ‘, showing water, water project, stumbles
× RELATED மக்களின் தாகம் தீர்க்கும் நீர், மோர்...