×

ஆன்லைன் காலத்திலும் அவதியோ அவதி 3 வருடமாக பூட்டி கிடக்கும் அரசு இ-சேவை மையங்கள்

* சாதி சான்றிதழ்களுக்கு அலையும் புதுகை மக்கள்
* தனியாரிடம் பணத்தை இழக்கும் அவலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 வருடமாக அரசு இ-சேவை மையங்கள் மூடியே கிடக்கிறது. இதனால் சாதி சான்றிதழ்களுக்கு தனியாரிடம் பணத்தை பொதுமக்கள் இழக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த 2014ம் ஆண்டு நகரத்தில் உள்ள மக்கள் பயன்பெறுவது போல், கிராம மக்களுக்கு தேவையான இ சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இ சேவை மையம் தொடங்க நடவடிக்கை எடுத்தது. சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், சிறு குறு விவசாயி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், கலப்பு திருமண சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், அடகு வணிகர் உரிமம் போன்ற சான்றிதழ்கள் பெற ஆன்லைனில் பெற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது எந்த பணிக்கும், கல்லூரிக்கும் விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் ஆன்லைன் தான் விண்ணப்பிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி போன்ற போட்டி தேர்வுகள் என அனைத்திற்கும் ஆன்லைனில் மூலம்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி அரசு துறைகள் அனைத்தும் ஆன்லைன் மையமாகி விட்டதால் இ-சேவை மையங்களை மட்டுமே பொதுமக்கள் சார்ந்து இருக்கின்றனர். கலெக்டர் அலுவலகம் மட்டுமே, தாலுகா அலுவலகங்களில் மட்டுமே இருந்த இ சேவை மையம் கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் கிராமங்களுக்கு இ சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் திறக்கப்படாமல், பொது சேவை மைய கட்டிடங்கள் பூட்டியே கிடக்கின்றன.
புதுக்கோட்டையில் மொத்தம் 497 கிராம ஊராட்சிகள் உள்ளன.

இந்த கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு இ-சேவை கிடைக்க ரூ.16 லட்சம் செலவில் 3 பெரிய அறைகளுடன் கிராம ஊராட்சி சேவை மையத்திற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டன. மகளிர் குழுவினருக்கு முறையான பயிற்சி அளித்து கம்ப்யூட்டர், அதி நவீன இணையதள வசதி பெற்று நகரத்தில் உள்ள அனைத்து மக்களும் பெறும் வசதியை கிராம மக்களும் பெறவேண்டும் என்றுதான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த பொது சேவை மையத்துக்கு அதிவேக இணையதள வசதியுடன் இயங்கும் கணினி, பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை கிராம சேவை மையத்திற்கு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தற்போது, பொது சேவை மையத்திற்கான அனுமதி தனியார் கணினி மையங்களுக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், கிராம ஊராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள கிராம பொது சேவை மையங்கள் பயன்பாடின்றி பூட்டிக்கிடப்பதால் ஆன்லைன் சேவைகள் இதுவரை கிராம மக்களுக்கு சென்றடையவில்லை.

இது குறித்து விவசாயி மிசா மாரிமுத்து கூறியதாவது: நாங்கள் விவசாயம் செய்கிறோம். பெரும்பாலும் படிக்காதவர்களின் சிரமங்களை போக்க கிராம இ சேவை மைய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த கிராம சேவை மைய கட்டிடம் பூட்டியே கிடக்கிறது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களை பெற வேண்டும் எனில் ஆன்லைனில் தான் விண்ணப்பிக்க வேண்டும். பயிர்காப்பீடு, பிரதமந்திரி உதவி திட்டம், பட்டா, சிட்டா அடங்கல் எங்கள் குழந்கைளுக்கு சான்றிதழ் பெற வேண்டுமெனில் கம்ப்யூட்டர் சென்டர் செல்ல வேண்டியுள்ளது. படித்தவர்கள் கைபேசியை வைத்துக்கொண்டு விண்ணப்பித்து விடுகின்றனர். நாங்கள் தனியார் கம்ப்யூட்டர் சென்டருக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கே சென்றால் ஒரு பிரிண்டவுட் எடுக்க ரூ.20 பெறுகின்றனர். அரசு உதவி திட்டங்கள் பெற வேண்டுமெனில் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.100ல் இருந்து ரூ.200 வரை பெறுகின்றனர்.

இதனால் எங்களுக்கு அதிகமான செலவுகள் ஏற்படுகிறது. இந்த சேவைகளை பெற நகரத்திற்கு சென்று ஒரு நாள் முழுக்க காத்துகிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சேவைகளை பெற கிராமத்தில் இ சேவை தொடங்க கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை செயல்படாமல் கிடக்கிறது. இந்த கட்டிடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், இலவச மது அருந்தும் பாராகவும் மாறிவிட்டது. விவசாயிகளின் துயர்துடைக்கும் வகையில் இ சேவை மையத்தினை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றார்.

அரசால் கைவிடப்பட்ட புதுவாழ்வு திட்டம் இதுகுறித்து வருவாய்துறையினர் கூறியதாவது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் இ சேவை மையங்கள் கிராமங்களில் புது வாழ்வு திட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. புது வாழ்வு திட்டத்தில் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்து இ சேவை மையம் கட்டிடத்தில் மக்கள் பயன்பாட்டிக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது புதுவாழ்வு திட்டம் தமிழக அரசால் கைவிடப்பட்டுவிட்டது. இதனால் கிராமங்களில் உள்ள இசேவை மையம் செயல்படாமல் உள்ளது. இந்நிலையில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த இ சேவை மையங்கள் அனைத்தும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

கிராமங்களில் உள்ள இ சேவை மைய கட்டிடங்கள் செயல்படுத்தும் வகையில் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் மூலம் இணையதள வசதி பெற்று மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் மத்திய அரசுக்கு ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றனர்.



Tags : Government e-service centers , Online, 3 years, locked, government e-service
× RELATED பள்ளிக் குழந்தைகளை அடிப்பது போன்ற...