வாகனப்பெருக்கம் நிறைந்த தேசிய நெடுஞ்சாலை: கோர விபத்துகளால் குலை நடுங்க வைக்கும் கிருஷ்ணகிரி

* தொடரும் உயிர்பலிகள்

* இழப்புகளும் ஏராளம்

கிருஷ்ணகிரி: தமிழகத்தின் எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் கன்னியாகுமரி-வாரணாசி,  கிருஷ்ணகிரி-ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி-பாண்டிச்சேரி, கிருஷ்ணகிரி-மதனப்பள்ளி, ஓசூர்-சர்ஜாபூர் என்று முக்கிய நகரங்களுக்கு செல்லும்  தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் பெரும்பாலான வாகனங்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியாகத்  தான் செல்கிறது. தற்போது நான்கு வழிச்சாலை, 6 வழிச்சாலைகள்  இந்த மாவட்டத்தில் உள்ளதால், சாலைகளில் செல்லும் வாகனங்கள் பெரும்பாலும் 100 கிலோமீட்டர் வேகத்திற்கு குறையாமல் செல்கிறது.

இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது கனரக வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும் அடிக்கடி மோதி விபத்து ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும், 18 ஆயிரம் பொது போக்குவரத்து வாகனங்கள் உள்ளன.  இரண்டு மற்றும் நான்கு சக்கர பட்டியலில் 5 லட்சத்து 34 ஆயிரம் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் மட்டும் இல்லாமல், பிற மாநில, மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களும், இம்மாவட்டத்தின் வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி அருகே உள்ள டோல்கேட்டில் மட்டும், தினமும் 22 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் 35 ஆயிரம் வாகனங்களும் கடந்து செல்வதாக சமீபத்திய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.  

இம்மாவட்டத்தில், கடந்த ஜனவரி முதல் அக்டோபர் மாதம் இறுதி வரை நடந்த விபத்துகள் குறித்த பட்டியல், சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் பெரும்பாலான மாதங்கள் கொரோனா தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பஸ்கள் இயக்கப்படவில்லை. ஆனாலும், இங்கு நடந்த 1031 விபத்துகளில் 251 பேர் பலியாகியுள்ளனர். 1184 பேர் காயம் அடைந்துள்ளனர். இதில் பலர் கை, கால்களை இழந்து நடமாட முடியாமல் உள்ளனர் என்பது வேதனைக்குரியது.  

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஏற்ப விபத்துகளும் அதிகமாகிறது. குறிப்பாக 2016ம் ஆண்டு, கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேலுமலை என்ற இடத்தில், பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 20 பேரும், அதே பகுதியில் ஏற்பட்ட மேலும் 2 விபத்துகளில், தலா 8 பேரும்  என மொத்தம் 36 பேர் பலியான சம்பவம், மாவட்டத்தில் உள்ள பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.

இது போன்ற விபத்துகளை தடுக்க,  பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திய போதும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையவில்லை. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் அதிக அளவில் விபத்துகள் ஏற்படுகிறது என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 5 முக்கிய நகரங்களுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அதிநவீன வசதி கொண்ட மருத்துவமனை இல்லை. இதுவே விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பிற்கு முக்கிய காரணமாக உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்லும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தலைமை மருத்துவமனையில், போதிய வசதிகள் இல்லை.

இதனால் விபத்தில் காயம் அடைந்தவர்களை பெங்களூரு அல்லது சேலத்திற்கு அனுப்பும் அவல நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் வழியிலேயே இறந்து விடுகின்றனர். எனவே, கிருஷ்ணகிரியில் அனைத்து வசதிகளும் கொண்ட ஒரு ஹைஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை அரசு துவங்க வேண்டும் என்பது போக்குவரத்து ஆர்வலர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கிருஷ்ணகிரியில் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகள் சார்ந்த திட்டங்களுக்கான கருத்துரு தயாரிக்கப்பட்டு அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றனர்.

Related Stories:

>