மேலூர் நகராட்சியில் பாதாள சாக்கடை வசதியின்றி 16 ஆயிரம் குடும்பங்கள் தவிப்பு

மேலூர்: மேலூர் நகராட்சியில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பாதாள சக்கடை திட்டம் செயல்படுத்தப்படாததால், கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி கொசு, நோய் உற்பத்தி மையங்களாக செயல்பட்டு வருகிறது. இதனால் சுமார் 16 ஆயிரம் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சி 27 வார்டுகளை கொண்ட இரண்டாம் தர நகராட்சி ஆகும். தற்போது நகராட்சியில் மொத்தம் 16,100 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், இத்தனை வீடுகளுக்கும் நகராட்சி சார்பில் வரி வசூல் செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் வரியை சரியாக வசூல் செய்யும் நகராட்சி பொதுமக்களின் அடிப்படை  வசதியான கழிவுநீர் செல்லும் சாக்கடை வசதியை சரி வர செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட வருடமாக இருந்து வருகிறது.

மதுரைக்கு அடுத்த பெரிய ஊர், நகராட்சி என்ற பெயர் பெற்றாலும், அடிப்படை வசதிகள் இல்லாத நகராட்சியாகவே மேலூர் உள்ளது. நகராட்சியில் உள்ள 27 வார்டுகளிலும் ஓடும் சாக்கடை கழிவு நீர், ஒவ்வொரு தெரு முடியும் இடத்துடன் நின்று விடும். அங்குள்ள காலி மனையிடம் அல்லது தெருவில் தேங்கி நிற்கும். மழை பெய்தால் சாலைகளில் பல இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும். இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல்களால் மக்கள் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.

ஆளுங்கட்சி சார்பில் தொடர்ந்து எம்எல்ஏக்கள் தேர்வாகியும் தொகுதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. தேர்தலில் மட்டும் வாக்குறுதியாக, ‘பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும்’ என அறிவிக்கப்படும். அத்தோடு சரி. அதன் பிறகு அது கிடப்பில் போடப்பட்டு விடும். பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் நகரெங்கும் தேங்கும் கழிவு நீரால் கொசு உற்பத்தி மேலூர் நகரில் அதிகளவு உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புக்கள் மேலூரில் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. நகரில் ஏற்கனவே உள்ள சாலைகள் மீது பல தடவை புது சாலை போடும் நகராட்சி, ஏனோ இந்த திட்டத்திற்கு மட்டும் முன் வரவில்லை. விரைவில் இதுதொடர்பாக போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக மேலூர் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

திட்டம் வருமா? வராதா?

பாலமுருகன் (மேலூர் நகராட்சி கமிஷனர்): மேலூர் நகராட்சியில் இது வரை பாதாள சாக்கடை திட்டம் என எந்த திட்டமும் கிடையாது. பாதாள சாக்கடையை நிறைவேற்ற டிஸ்போசல் பாயிண்ட் என ஒன்று வேண்டும். நகரில் அது போல் எந்த இடமும் கிடையாது. எனினும், நகரில் எங்கும் கழிவு நீர் தேங்கவில்லை. தினசரி துப்புரவு ஊழியர்களை கொண்டு அவை சுத்தம் செய்யப்பட்டு விடுகிறது.

சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடமில்லை

பெரியபுள்ளான் (மேலூர் எம்எல்ஏ): நகரில் தேங்கும் கழிவு நீர் அனைத்தையும் ஒரு இடத்தில் சேர்த்து சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். இதுபோல் ஒருங்கிணைக்க நகராட்சியில் அரசு இடம் ஏதும் இல்லை. தனியார் இடத்தினை விலைக்கு வாங்கியே இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும். இடம் வாங்குவதற்கு உண்டான பணிகள் துவங்கி உள்ளது. இடம் கிடைத்தவுடன் பணிகள் விரைவில் துவங்கும்.

திமுக ஆட்சிக்கு வந்ததும் பிரச்னைக்கு தீர்வு

துரை புகழேந்தி (முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர்) மேலூர் நகரில் கழிவு நீர் பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் தேர்தல் வாக்குறுதியாக இதை கூறும் அதிமுக சார்பில் போட்டியிட்ட சாமி முதல் தற்போதைய பெரியபுள்ளான் எம்எல்ஏ வரை வெற்றி பெற்றதும் இதை கண்டுகொள்வதே கிடையாது. மேலூர் தொகுதியை திமுக கைப்பற்றினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.

கமிஷன் கிடைக்காதென்பதால் கண்டு கொள்ளவில்லையோ?

வெங்கடேசன் (முன்னாள் பாஜ, மாவட்ட செயலாளர்) :  தெருவில் ஓடி வரும் சாக்கடையை எங்கேயும் ஒருங்கிணைக்கவில்லை. நகரில் அந்தந்த தெருவில் உள்ள சாக்கடை கழிவுகள் அந்த தெருவுடனே முடிந்து விடும். இதனால் தேங்கும் அந்த கழிவு நீரில் இருந்து அதிகளவு கொசு உற்பத்தி உள்ளதுடன் பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. முறையாக வரி வசூல் செய்யும் நகராட்சி அடிப்படை வசதியான கழிவுநீர் பிரச்னைக்கு முடிவு காணவே இல்லை. ஆண்டுக்கு பல கோடிக்கு புது திட்டங்களை போடும் நகராட்சி இதற்கு மட்டும் நிதி ஒதுக்குவதே கிடையாது. போதுமான கமிஷன் இதில் கிடைக்காது என்று எண்ணுகிறார்களோ என்னவோ?.

Related Stories:

>