முதல்வர் வேட்பாளரை பாஜ கட்சிதான் அறிவிக்கும்: அமைச்சர் செல்லூர் ராஜூ பல்டி

மதுரை: அகில இந்திய கட்சி என்பதால், பாஜதான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.  மதுரை பழங்காநத்தம் பகுதியில் நேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்த   அமைச்சர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை  வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றியுள்ளோம். தங்கத்தை தோண்டி எடுக்கும் நாடுகளில் கூட தாலிக்கு தங்கம் வழங்கியது கிடையாது.

ஆனால், தமிழகத்தில் மட்டுமே தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டு வருகிறது. வழக்கமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள், சட்டமன்றத்திலும் எதிரொலிக்கும் என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்ப்பது  தவறு. வரும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசப்பட்டு வருகிறது. பாரதிய ஜனதாவை பொறுத்தவரை, அகில இந்திய கட்சி என்பதால் அவர்களின் கொள்கைப்படி, அகில இந்திய கட்சியின் தலைவர்தான் கூட்டணியில் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்.

கூட்டணியில் மாநில கட்சிகளோடு, அகில இந்திய கட்சிகள் இருக்கும்போது முதல்வர் வேட்பாளரை மாநிலக் கட்சிகள் அறிவிக்க கூடாது என்பதால் அகில இந்திய கட்சி அறிவிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர்  வேட்பாளர் என கூறி வந்த நிலையில், திடீரென அமைச்சர் செல்லூர் ராஜூ இப்படி மாற்றிப் பேசியது அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: