×

மத்திய அரசின் அழைப்பை ஏற்று நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்துள்ளனர். மத்திய அரசின் அழைப்பை ஏற்று நாளை மறுதினம் பேச்சுவார்த்தைக்கு வருவதாக விவசாய சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் சிங்கு, திக்ரி, காஜிபூர் எல்லையை முற்றுகையிட்டு, கடந்த மாதம் 25ம் தேதி முதல், லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி சலோ’ போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய அமைச்சர்கள் விவசாய சங்கங்களுடன் நடத்திய 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து, மத்திய அரசு பலமுறை கடிதம் அனுப்பியும் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வர சம்மதிக்கவில்லை. இதனிடையே, 9 கோடி விவசாயிகளுக்கு கிசான் திட்ட நிதியை விடுவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு வர மத்திய அரசும் விவசாயிகளுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இது குறித்து 31வது நாள் போராட்டத்தை தொடர்ந்த 40 விவசாய சங்கங்களும் இணைந்து நேற்று ஆலோசனை நடத்தின. மாலை 3 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அரசுடன் நாளை மறுநாள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய வேளாண் அமைச்சகத்தின் கூடுதல் செயலருக்கு விவசாய சங்கங்கள் எழுதிய கடிதத்தில், `மத்திய அரசின் பிரதிநிதிகளுடன், வரும் 29ம் தேதி காலை 11 மணிக்கு அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த விவசாய சங்கங்கள் முடிவு எடுத்துள்ளன,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த கடிதத்தில், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு குறைபாட்டை கட்டுப்படுத்த, காற்று தரம் மேலாண்மை ஆணையத்தின் மூலம் விவசாய கழிவுகளை எரிக்கும் விவசாயிகளிடம் இருந்து சட்டப்படி அபராதம் வசூலிப்பதில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட மின்சார வரைவு மசோதா 2020ல் விவசாயிகளை பாதிக்கும் அம்சங்கள் நீக்கப்பட வேண்டும்,’ என்று கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, விவசாய சங்கங்கள் ஏற்கனவே, புறக்கணித்த அர்த்தமற்ற அதே திருத்தங்களை செய்வதாக கூறிக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தாமல், உறுதியான திட்டத்துடன் அரசு முன்வர வேண்டும். உத்தரவாத விலை கோரும் எங்கள் கோரிக்கை அப்படியே இருக்கிறது. இதுவரை மத்திய  அரசு எழுதிய கடிதங்களில், விசாயிகளின் கருத்துகளை புரிந்து கொண்டதாக  தெரியவில்லை. எனவே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எங்களது கோரிக்கைகளை  அரசுக்கு புரிய வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை உடன்பட்டுள்ளோம்,’ என்று விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, வரும் 30ம் தேதி,  குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் விவசாயிகள் மாபெரும் டிராக்டர்  பேரணி நடத்த இருப்பதாகவும், டெல்லி மக்கள் இந்த பேரணியில் பங்கேற்று  தங்களது புத்தாண்டை போராடும் விவசாயிகளுடன் கொண்டாடும்படி விவசாய சங்கங்கள்  கேட்டு கொண்டுள்ளன.

பாஜ கூட்டணியிலிருந்து ஆர்எல்பி விலகல்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முதலாவதாக, சிவசேனா கட்சி கடந்தாண்டு நவம்பரில் விலகியது. இதையடுத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் மற்றொரு கூட்டணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் கடந்த செப்டம்பரில் வெளியேறியது. இதைத் தொடர்ந்து, வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 2வது கட்சியாக, பாஜ கூட்டணியில் அங்கம் வகித்து வந்த ராஜஸ்தானின் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) நேற்று பாஜ உடனான கூட்டணியை முறித்து கொண்டது.

இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாக்பூர் தொகுதி எம்பி.யுமான அனுமன் பெனிவால், ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுகிறது. அக்கூட்டணி உடன் ராஷ்டிரிய லோக் தந்திரிக் கட்சி பெவிகால் போட்டு ஒட்டப்படவில்லை. நாங்களாகவே தான் அதில் இருந்து வெளியேறி இருக்கிறோம்,’’ என்று கூறினார். ஏற்கனவே, பீகாரில் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது. அரியானாவிலும் பாஜ கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அரியானா சுங்க சாவடிகளை முற்றுகையிட்டு நேற்று 2வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
* பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க, வாகனங்கள் மூலம் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
* விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக ரயில்வே துறைக்கு ரூ.2400 கோடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Central Government , Accept the invitation of the Central Government Negotiate again the next day tomorrow
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...